சபரிமலையில் தங்க கொடிமரம் அமைப்பதற்கான தேக்கு மரம் பம்பை வந்தது!

sabarimala-kodimaram7

சபரிமலையில் அமைக்கப்பட உள்ள தங்க கொடிமரத்துக்கான தேக்குமரம் பக்தர்களின் சரணகோஷத்துடன் பவனியாக பம்பை எடுத்து வரப்பட்டது. சபரிமலையில் தற்போது உள்ள கொடி மரம் பழையதாகி விட்டதால் புதிய கொடிமரம் அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய தங்க கொடி மரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இதற்கான தேக்குமரம் தரும்படிவனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு வனப்பகுதி களில் தேக்குமரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.இறுதியில் கோந்நி அருகே வயக்கரையில் வனத்துறைக்கு சொந்தமான காட்டில் உள்ள ஒரு தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. 1951-ல் நடவு செய்யப்பட்ட இந்த தேக்குமரம் 64 வயதுடையது. 14.3 மீட்டர் உயரமும், 135 செ.மீ. சுற்றளவும் கொண்ட இந்த மரத்தின் விலை 4.75 லட்சம் ரூபாய் ஆகும்.மரம் வெட்டுவதற்கு முன்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு புண்ணியாகம் தெளித்தார். பின்னர் வெட்டுவதற்கான ஆயுதங்களை பூஜித்து வழங்கினார். வடம் மற்றும் கிரேன் உதவியுடன் மரம் மண்ணில் விழாமலேயே லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் பவனியாக புறப்பட்ட மரம் நேற்று மாலை பம்பை வந்து சேர்ந்தது.

Leave a Reply