இன்று டிவி இல்லாத வீடுகளே இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆளற்ற வீடுகளில்கூட டிவி தேமே என்று அமர்ந்து வெறும் அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. முட்டாள்களின் பெட்டி எனக் கேலி செய்யப்பட்ட டிவியில் இன்று தினந்தோறும் அறிவுஜீவிகள் நரம்பு வெடித்துவிடும் அளவுக்கு ஆக்ரோஷமாகப் பேசுகிறார்கள். பார்வையாளனுக்கு ரத்தக் கொதிப்பு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
ஆனால் டாக் ஷோ முடிந்த பின்னர் மேக்கப்பைக் கலைத்துவிட்டு, சுவையான டீயைக் குடித்துவிட்டு, ஆங்கரிடம் இனிமையான ஸ்மைலுடன் கைகுலுக்கிவிட்டு விடைபெற்றுவிடுகிறார்கள். மறுபடியும் நாளை வர வேண்டுமே. சரி அவர்கள் பாடு அவர்களுக்கு. நாம் நமது விஷயத்துக்கு வந்துவிடுவோம்.
ஒரு பக்கம் டிவி தெரியும்போதே இவ்வளவு அக்கப்போர் என்றால் இரு பக்கங்களிலும் டிவி தெரிந்தால் எப்படி இருக்கும்? உனக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்கிறீர்களா? கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படியொரு டிவியை எல்ஜி நிறுவனம் உருவாக்கிவிட்டது. பெர்லினில் நடைபெற்ற சர்வதேச மின்னணுப் பொருள்களுக்கான கண்காட்சியில் இந்த டிவியை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
திரையின் அகலம் 111 அங்குலம், 55 அங்குலம் என இரண்டு வகைகளில் இந்த டிவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 55 அங்குல அகலம் கொண்ட டிவியின் தடிமன் வெறும் 5.3 மில்லிமீட்டர் மட்டுமே. எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த டிவியை அதன் இரு பக்கங்களிலிருந்தும் இருவர் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இப்போதைக்குச் சோதனை முயற்சியாகத்தான் உருவாக்கியிருக்கிறார்கள்.
இது சந்தைக்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியவில்லை. இந்த டிவி வீடுகளுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ பெரிய பெரிய ஷாப்பிங் மால்களிலும் வர்த்தக வளாகங்களிலும் விளம்பரங்களுக்கு நன்கு உதவும்.