மாநில போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. நீதிபதியின் கருத்துக்கு தமிழக அரசின் பதில் என்ன? கருணாநிதி கேள்வி

மாநில போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. நீதிபதியின் கருத்துக்கு தமிழக அரசின் பதில் என்ன? கருணாநிதி கேள்வி
karunanidhi
மாநில போலீஸார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு காவல் துறைக்கு, அதன் தகுதி, திறமை, வேகம், புலனாய்வு நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் “ஸ்காட்லாண்டு” காவல் துறைக்கு இணையான மதிப்பும், புகழும் ஒரு காலத்தில் உண்டு.

அந்தப் பாராட்டெல்லாம் தற்போது பொய்யாய், பழங்கனவாய் ஆகி விட்டது. பரபரப்பூட்டிய மிக முக்கியமான கொலைகளில் கூட, குற்றவாளிகள் மூன்று நான்கு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

செம்மரக் கடத்தல் வழக்கில் காவல் துறை அதிகாரி ஒருவரே முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆளுங்கட்சியினருடனான அவருடைய செல்வாக்கின் காரணமாக அந்த வழக்கு குப்பைக் கூடைக்குப் போய் விட்டது.

ஒரு மூத்த அதிகாரி தற்கொலையே செய்து கொண்டு மாண்டார். அந்த வழக்கில் அமைச்சர் ஒருவரே பதவியைப் பறிகொடுத்து சிறைக்குச் சென்றார். பின்னர் அந்த வழக்கும் எங்கிருக்கிறது என்று தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, ஏன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரே இந்த ஆட்சியில் பட்டப் பகலில், வெட்ட வெளியில் கொலை செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் கண்டு பிடிக்கப்படவில்லை.

பொதுவாக இந்த ஆட்சியில் காவல் துறை சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றங்களைக் கண்டுபிடிப்பது என்பதற்குப் பதிலாக ஆளுங் கட்சிக்கு எப்படியெல்லாம் துணை புரிவது, எதிர்க்கட்சிகளை எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கி அச்சுறுத்துவது, வரவிருக்கின்ற 2016 பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற எப்படியெல்லாம் திரைமறைவில் காய் நகர்த்துவது என்பதிலே தான் மிகுந்த அக்கறையோடு பணியாற்றுகிறார்களாம்!

காவல் துறையில் மூத்த அதிகாரியாகச் செயல்பட்டு, பதவி நீடிப்பும் பெற்று, ஆளுங்கட்சிக்காகவே கண்ணும் கருத்துமாகப் பணியாற்றியவருக்கு, வேறு ஒரு முக்கிய பணி அளித்ததற்கு முக்கிய காரணமே, அவர் செய்த சிறப்பான (?) இப்படிப்பட்ட அரசியல் வியூகங்களுக்காகத் தான் என்றே பரவலாகக் கருதப்படுவதோடு, பத்திரிகைகளாலும் பேசப்படுகிறது.

காவல் துறை மீது இதுவரை இல்லாத இப்படிப்பட்ட கடுங்குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அணி வகுத்து வந்துகொண்டிக்கும் நேரத்தில், அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல இன்று ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில், இன்று (19-9-2015) முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியிலேயே, “No Confidence in State Police, observes C.J.” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், “Chief Justice S.K. Kaul on Friday made an oral observation in the open Court that he has lost confidence in State Police” – அதாவது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்கள் மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதி மன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவையற்றது, தமிழகப் போலீஸ் பாதுகாப்பு போதுமானது என்றெல்லாம் வாதாடிய போது, தலைமை நீதிபதி குறுக்கிட்டு “விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் உள்ளது போல மத்தியப் பாதுகாப்பு வழங்கினால் என்ன தவறு உள்ளது? பலமுறை உத்தரவிட்டும் கோர்ட் வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்துகிறார்கள். எனவே தமிழகப் போலீசார் மீது நம்பிக்கை இல்லை. இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்றைக்கு தமிழக அரசும், மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும்” என்று கருத்து வெளியிட்டிருக்கிறார் என்றால், இதற்கு காவல் துறை பொறுப்பேற்றுள்ள முதல் அமைச்சர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமா? வேண்டாமா?

உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியே இவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார் என்றால், எதிர்க் கட்சிகள் காவல் துறை மீது கொண்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை என்று தானே ஆகிறது?

இன்னும் சொல்லப் போனால், திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான விஷ்ணுப் பிரியா என்ற பெண் டி.எஸ்.பி., பணியில் சேர்ந்த ஏழு மாதக் காலத்திலேயே, குரூப் 1 தேர்வில், காவல் துறையைத் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்றும், பணியில் பயங்கரமான நெருக்கடிகளால் ஏற்படும் மன உளைச்சல்களைத் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை முடிவை நாடுவதாகவும் எழுதி வைத்து விட்டு நேற்றையதினம் வேறு சில அதிகாரிகள் செய்ததைப் போல, தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதற்கெல்லாம் காவல் துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதல் அமைச்சரின் பதில் என்ன? பேரவையில் 110வது விதியின் கீழ் அதைச் செய்யப் போகிறோம், இதைச் செய்யப் போகிறோம் என்று வானத்தை வில்லாய் வளைக்கப் போகிறோம்; மணலைக் கயிறாய்த் திரிக்கப் போகிறோம் என்பதைப் போன்ற வெற்று அறிவிப்புகள் மட்டும் தானா?”

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply