திமுக தலைமையின் அதிகார அரசியல் முடிந்துவிட்டது. வைகோ
மதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி திமுகவில் இணைந்து வரும் நிலையில், மதிமுக உடைக்க திமுக சதி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘மதிமுகவை உடைக்க நினைத்திருந்தால் எப்போதோ உடைத்திருப்போம். அந்த கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை’ என்று கூறினார். இந்நிலையில் ‘திமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, பட்டத்து இளவரசரே போதும்’ என்று மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வைகோ கூறியதாவது: “மதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகியது சவாலே அல்ல. கட்சியில் இருந்து விலகியவர்கள் திராவிடம் குறித்து ஆலோசனை கூற தகுதியற்றவர்கள். நல்ல முடிவைதான் நான் எடுத்திருக்கிறேன். அதிமுகவை வீழ்த்தும் தகுதியோடு மதிமுகவே உள்ளது.
திராவிட இயக்கத்தை பாதுகாக்கவே திமுக, அதிமுகவை எதிர்க்கிறோம். திமுக தலைமையின் அதிகார அரசியல் முடிந்துவிட்டது. திமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, பட்டத்து இளவரசரே போதும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது. சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து முல்லைப் பெரியாறை பாதுகாத்தவர் ஜெயலலிதா ” என்று தெரிவித்தார்.