‘காமத்தின் சின்னம்’ ஷாஜகான். பாஜக தலைவரின் கடிதத்தால் பரபரப்பு

‘காமத்தின் சின்னம்’ ஷாஜகான். பாஜக தலைவரின் கடிதத்தால் பரபரப்பு
shajahan
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே அந்த கட்சியினர் சர்ச்சைக்குரிய பல விஷயங்களை, குறிப்பாக சிறுபான்மையினர்களை தாக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றாகிய ‘தாஜ்மஹாலை’ கட்டிய ஷாஜகானை ‘காமத்தின் சின்னம்’ என்றும், அவருடைய பெயரில் உள்ள சாலைக்கு, பக்தியின் சின்னமாகத் திகழும் தஷ்ரத் மாஞ்சியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அஸ்வினி உபாத்யாயா என்பவர் இன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, “‘காமத்தின் சின்னம்’ ஆக திகழும் முகலாய மன்னர் ஷாஜகானுக்குப் பதிலாக அன்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி, பக்தியின் சின்னமாகத் திகழும் தஷ்ரத் மாஞ்சியின் பெயரைச் சூட்ட வேண்டும்.

நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் உத்வேகத்துக்கு ஆதாரமாகவே மாஞ்சி திகழ்கிறார். அவரது மன உறுதியும் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்புப் பயணமும், முழுமையான போராட்ட வாழ்க்கையும் நம் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக விளங்குகிறது.

யுபிஎஸ்சி தலைமையகம் உள்ள ஷாஜகான் சாலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வலம் வருகிறார்கள். எனவே, அந்த சாலைக்கு மாஞ்சியின் பெயர் சூட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது கடிதத்தில் அஸ்வினி கேட்டுக்கொண்டுள்ளார்.

அஸ்வினி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாஞ்சி என்பவர் பிஹாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கஹலவுர் கிராமத்திலுள்ள மலையைத் தனியாளாகக் குடைந்து 360 அடி நீள பாதையை உருவாக்கியிருக்கியவர். ‘மலை மனிதர்’ என்று அழைக்கப்படும் இவரது பெயரையே புதுடெல்லியில் உள்ள முக்கிய சாலைகளுள் ஒன்றான ஷாஜகான் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply