உலகின் ஒரே இந்து நாடு என்ற அந்தஸ்தை இழந்தது நேபாளம்.

உலகின் ஒரே இந்து நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் இழந்தது
nepal
உலகின் ஒரே இந்து நாடு என்று அழைக்கப்பட்டு வந்த நேபாளம், தற்போது மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக மாறியுள்ளது. இதற்கான அரசியல் சாசன சீர்திருத்தம் நிறைவேறியுள்ளது. இந்த சீர்திருத்தத்தை எதிர்த்து நேபாளத்தில் உள்ள ஒரு பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

இந்து நாடாக இருந்து வரும் நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவது உள்பட பல்வேறு சீர்திருத்தங்களுடன் கூடிய புதிய அரசியல் சாசனம் குறித்து 601 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த 16-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது 532 உறுப்பினர்களில் 507 பேர் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவாகவும் 25 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்து மன்னராட்சி முறையில் இருந்து மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடாக நேபாளம் தற்போது உருவெடுத்துள்ளது.

புதிய அரசியல் சாசனத்துக்கு மாதேஸி என்னும் பிரிவினர்களும் தாரஸ் சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் சாசனத்தில் தங்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றும் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply