போதையில் பள்ளத்தில் விழுந்த நபர் மீது தார் ஊற்றி ரோடு போட்ட சாலை பணியாளர்கள். ம.பி.யில் பரபரப்பு

போதையில் பள்ளத்தில் விழுந்த நபர் மீது தார் ஊற்றி ரோடு போட்ட சாலை பணியாளர்கள். ம.பி.யில் பரபரப்பு
road
மத்திய பிரதேச மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியாளர்கள் போதையில் பள்ளத்தில் விழுந்த ஒருவரை கவனிக்காமல் அவர் மீது மண் போட்டு மூடி தார் ரோடும் போட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்னி என்ற கிராமத்தைச் சேர்ந்த 45 வயது லடோரி லால் என்பவர் சமீபத்தில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி கிராம மக்களிடம் புகார் கூற, உடனடியாக கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து டார்ச் லைட் மூலம் லடோரியை பல இடங்களில் தேடினர். அப்போது கிராமத்தில் புதிதாக போடப்பட்டிருந்த தார் சாலையில் லடோரி லால் அணிந்திருந்த சட்டை கிழிந்து ஒட்டியிருந்தது தெரியவந்தது. அதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தார் சாலையில் ஒரு பகுதியில் லடோரியின் கை தெரிந்ததாகவும், உடனடியாக அந்த இடத்தில் கிராம மக்கள் தோண்டியபோது அங்கு லடோரியின் உடல் சிதைந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது. போதையுடன் வந்த லடோரி தவறி பள்ளத்தில் விழுந்திருப்பார் என்றும், பள்ளத்தில் இருந்த அவரை கவனிக்காமல் அவர் மீது மண்போட்டு மூடி தார் ஊற்றி ரோடு ரோலர் மூலம் சாலையை செப்பனிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிய வந்தவுடன் கிராம மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்களை போலீஸார் சமாதானப்படுத்தி லடோரியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் பள்ளத்தில் ஆள் இருப்பதுகூட தெரியாமல் சாலை போட்ட ரோடு ரோலர் ஓட்டுநரும், சாலை பணியாளரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply