ராமனை தவறாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் நாக்கு அறுக்கப்படும். ஸ்ரீராம்சேனா அமைப்பு எச்சரிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதியதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் கர்நாடக மாநில ஸ்ரீ ராமசேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி என்பவர் ‘இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பை சேர்ந்த பிரசாத் அட்டவர் என்பவரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், வடக்கு கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி, ”ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது.
கே.எஸ்.பக்வான், சந்திர சேகர பாட்டில் போன்ற எழுத்தாளர்கள், இந்து கடவுள்களை அவமதிப்பது, இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது. தாங்கள் கடவுளாக வழிபடும் ராமனை தவறாக ஒருவர் விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் எழுத்தாளர்களின் நாக்கை மக்கள் அறுப்பார்கள்.” என்று கூறியுள்ளார். சித்தலிங்க சுவாமியின் இந்த கருத்துக்கு சமூகவலைத்தளங்கள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.