அகத்தின் அழகு முகத்தில், (Face is the index of the Mind) இது எல்லோருக்கும் தெரிந்த பொன்மொழி. அகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் என்பதுதான் புதுமொழி.
ஆம், ஃபேஸ்புக்கில் நீங்கள் பதியும் ஒவ்வொரு நிலைத்தகவலும் உங்களைப் பற்றி, உங்கள் மனநிலை பற்றி மற்றவர்களுக்கு தெளிவாக தெரிவிக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
லண்டனில் உள்ள பிரனல் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு சொல்வது இதுவே, “உங்கள் நிலைத்தகவல்கள் உங்கள் மனநிலையின் பிம்பங்கள்”
ஆய்வு முடிவின் சில துளிகள்:
* நீங்கள் அடிக்கடி மனிதஉறவு தொடர்பான நிலைத்தகவல்களை பதிவு செய்பவரா? அப்படியென்றால் நீங்கள் உங்கள் உறவுநிலை குறித்து ஒருவித பாதுகாப்பற்ற, பதற்ற நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். அதாவது, நீங்கள் அடுத்தவரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க விரும்புகிறீர்கள், பிறர் ஆதரவு தேடுகிறீர்கள் என்று அர்த்தம்.
* நீங்கள் அடிக்கடி ஃபிட்நஸ் சம்பந்தமான பதிவுகளோ, ஆரோக்கிய வாழ்வு சம்பந்தமான பதிவுகளோ பதிந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு மேட்டிமைவாசி என்கிறது அந்த ஆய்வு. உங்கள் எண்ணமெல்லாம் லைக்ஸ், கமென்ட்ஸ் பற்றிமட்டுமே இருக்கிறதாம். அதாவது, ‘நான்’ என்பதை அடிக்கோலிட்டு காட்டவே நீங்கள் முயல்கிறீர்கள் என்று அர்த்தம்.
* அட யாருமே பேசாத ஒரு விஷயத்தை நீங்கள் எப்போதுமே முதலில் முன்வைக்கிறீர்கள் என்றால், ‘இவர் வித்தியாசமானவர்’ என அறியப்பட விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி ஃபேஸ்புக் ஜாதகம் பற்றி கூறும் இந்த ஆய்வு முடிவில், “ஃபேஸ்புக்கில் அதிகம் லைக்கப்படுபவர்கள் சமூகத்தில் ஓர் அடையாளத்தை பெற்றுவிட்ட பெருமிதத்தையும், ஒரு லைக்குகூட பெற முடியாதவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட வெறுமை உணர்வையும் பெறுகின்றனர்” என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், “ஃபேஸ்புக்கில் நீங்கள் தற்பெருமை பேசும் தனிநபர் என்றால் உங்களுக்கு ‘தற்காதல்’ (narcissistic) அதிகம்” என்கிறது அந்த ஆய்வு.
இறுதியாக அந்த ஆய்வு முன்வைக்கும் உறுதியான வாதம் என்னவென்றால், “உங்கள் ஃபேஸ்புக் நிலைத்தகவல் உங்கள் நட்பு வட்டாரத்தால் எப்படி பகுப்பாய்வு செய்யப்படலாம் என்ற விழிப்புணர்வை பெற்றிருந்தால், தேவையற்ற நிலைத்தகவல்களை தவிர்க்கலாம்”