ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தை பராமரிப்பது யார்? ஜெயலலிதா -ஸ்டாலின் கருத்து மோதல்
திமுக பொருளாளர் ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் மாறி மாறி கருத்து மோதல்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா ”விவாதம் என்றாலே ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துகள் கூறப்படுவது வாடிக்கை. தமிழக சட்டம்-ஒழுங்கு, போலீசாரின் செயல்பாடு ஆகியவை பற்றி ஆதரவாகவும், எதிராகவும் அவையில் கருத்துகள் கூறப்பட்டன. அவை உறுப்பினர்களாக இருந்தும் அவைக்கு வராமல் அவைக்கு வெளியே சிலரால் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இங்கு கூறப்பட்ட எதிர்மறை கருத்துகளை பற்றி சிந்திக்கும்போது, பிராங்க் ஹெர்பர்ட் என்ற அமெரிக்க அரசியல்வாதி தெரிவித்த கருத்துகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவர், “உண்மை நிலையை மாற்றுவதே விவாதத்தின் குறிக்கோள்” என்றார். அதன்படி, உண்மையை திரித்து, மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி உண்மைக்கு மாறான விமர்சனங்களை சிலர் பேச்சு, சிலர் அறிக்கைகள், சிலர் முகநூல் பதிவு போன்றவற்றின் மூலமாக கருத்து கூறுகின்றனர்.
சட்டமன்ற தி.மு.க. குழு தலைவர் மு.க.ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா? என்பதை அவர் விளக்கவேண்டும். ஏனென்றால், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது மு.க.ஸ்டாலின் தனது முகநூல் மூலம் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், தி.மு.க.வின் தலைமைக்கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
அந்த இணையதளத்தை பராமரிக்கும் சில தோழர்கள் அந்த வாழ்த்தை வெளியிட்டார்கள் என்றும், அந்த வாழ்த்துச் செய்தி மு.க.ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே, தற்போதும் சட்டம்-ஒழுங்கு பற்றி மு.க.ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்துள்ள பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துதானோ, என்னவோ?” என்று கூறினார்.
முதல்வரின் இந்த பேச்சுக்கு தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் பதில் கூறியபோது, “‘சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில், எனது ‘பேஸ்புக்’ கணக்கில் (முகநூல்) வெளியிடும் கருத்துகள் என்னுடையது அல்ல என்றும், அந்த கருத்துகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால், ஜெயலலிதா சட்டசபையில் அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம், அவராகவே எழுதி கொண்டு வந்தாரா? வேறு நபர்கள் எழுதியதை வாசித்தாரா? என்பதற்கு பதில் அளிக்க வேண்டும். சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான எங்களை பேச விடுவது கிடையாது. சட்டமன்றத்தில் பேச முடியாததால், உங்களைத் தேடி மக்கள் மன்றத்தில் பேச வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.