தேவைப்பட்டால் ஆயுதங்களையும் எடுப்போம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சால் பரபரப்பு

தேவைப்பட்டால் ஆயுதங்களையும் எடுப்போம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சால் பரபரப்பு
evks
சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசி வாங்கிக் கட்டிக்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் “தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்” என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி, சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியபோது, “டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா துணிச்சலான, நேர்மையான, போலீஸ் அதிகாரியாக செயல்பட்டார். அவரது தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அவரது மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை, சி.பி.சி.ஐ.டி விசாரணையே போதும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

ஒரு பெண் அதிகாரி தற்கொலை சாதாரணமானதா? அவர் என்ன விபத்தில் இறந்தாரா? அல்லது மாரடைப்பில் இறந்தாரா? தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பெண் போலீசார் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 216 பேர் இறந்து இருக்கிறார்கள்.

போலீசார் 24 மணி நேரமும் பணிபுரிகிறார்கள். இதனால் அவர்களால் சுறு சுறுப்புடன் செயல்பட முடியவில்லை. அவர்களது பணியை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானதாக பேசப்பட்டது. இன்று துதிபாடும் போலீசாக விளங்குகிறது. உயர் அதிகாரிகள் 4, 5 பேர் தவிர மற்றவர்கள் வேதனையுடன் உள்ளனர்.

வேளாண் அதிகாரி தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகியபோது,  டி.எஸ்.பி தற்கொலையிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் எப்போதும், பெண்களுக்காக, தலித்துகளுக்காக போராடும். தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்”

இவ்வாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.

Leave a Reply