நேதாஜியை ஸ்டாலின் தூக்குலிட்டாரா? சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு
நேதாஜியின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அவர் விமான விபத்தில் இறந்ததாகவும், 1964ஆம் ஆண்டு வரை அவர் உயிருடன் இருந்ததாகவும், சீனாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘நேதாஜி ரஷ்ய அரசால் தூக்கிலிடப்பட்டார் என்றும், இந்த தகவல் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தெரியும்’ என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இந்த பேட்டியின் மூலம் நேதாஜியை சுப்பிரமணியன் சுவாமி களங்கப்படுத்திவிட்டதாக தமிழக பாரதிய சுபாஷ் சேனா மாநில அமைப்பாளர் அழகுமீனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி 11.1.2015-ல் அளித்த பேட்டியில் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. ஸ்டாலின் ரஷிய அதிபராக இருந்தபோது, 1953-ல் ரஷ்யாவில் உள்ள சிபிரியா சிறையில் தூக்கில் போடப்பட்டார். இது அப்போதைய பிரதமர் நேருவுக்குத் தெரியும்’ எனக் கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு இரு விசாரணை ஆணையங்களை அமைத்தது. அந்த இரு விசாரணை ஆணை யங்களும், நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக அரசுக்கு அறிக்கை அளித்தன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, நேதாஜி 1967-ம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததற்கு ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில் நேதாஜி தூக்கில் போடப்பட்டதாகக் கூறி, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுப்பிரமணி யன் சுவாமி பேட்டியளித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேட்டி இந்திய, ரஷ்ய உறவுகளைப் பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நேற்று விசாரணை செய்த நீதிபதி ஆர்.மாலா, மனுதாரரின் புகார் மனு தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் தகவல் பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணயை வரும் 29ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.