சபரிமலை 18 படிகளில் புதிய பஞ்சலோக தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது. ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கும் போது புதுப்பொலிவு பெற்ற படிகளை பக்தர்கள் பார்க்க முடியும்.
சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுசேரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை என 18 மலை தேவதைகள் குடிகொள்ளும் படியாக கருதப்படுகிறது. விரதமிருந்து இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே இந்த படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறி செல்லும் படிகள் பழுதாகி விட்ட நிலையில் புதிதாக பஞ்சலோக தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் முடிந்த நிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கலசம் நிறைத்து அதை ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முன்புறம் தேவசம்அதிகாரிகளும், நன்கொடை தாரர் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியை முடிப்ப தாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வேலைகள் தொடங்கியது. ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த பஞ்சலோக தகடுகள் வெட்டி எடுத்து அப்புறப்படுத்திய பின்னர் புதிய தகடுகள் பொருத்தப்படும். மொத்தம் நான்கு டன் எடை கொண்ட பஞ்சலோக தகடுகள் பதிக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்கு முன்னர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பணிமுடிந்தால் பிரதிஷ்டை சடங்குகளுக்கு பின்னர் பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவர்