கூகுளுடன் இணைந்து 500 இந்திய ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை. மோடி

கூகுளுடன் இணைந்து 500 இந்திய ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை. மோடி
wifi
இந்தியாவில் உள்ள 500 முக்கிய ரயில் நிலையங்களிலும் இலவச வைஃபை சேவை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் என்று அமெரிக்காவின்  சிலிக்கான்வேலியில் டிஜிட்டல் இந்தியா மாநாட்டைத்  தொடங்கி வைத்து பேசிய பிரதமர் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ  சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதள்ள, அடோப் நிறுவன சிஇஓ நாராயண், உள்பட பல முன்னணி கணினி மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,

” பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் இப்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றிவிட்டன. எனவே இந்தியாவிலுள்ள விமான நிலையங்கள்  மட்டுமல்ல, இந்தியாவின் 500 ரயில் நிலையங்களிலும்  இலவச வைஃபை இணையதள வசதியை அரசு அளிக்க உள்ளது. இதற்காக இந்திய அரசு கூகுளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் குக்கிராமங்களிலுள்ள பெண்கள் சிறந்த மருத்துவ சேவையையும், விவசாயிகள் நல்ல மார்க்கெட் ரேட்டையும் இணையம் மூலம் அறிந்துகொள்கிறார்கள். பெண் குழந்தைகளைக்  காப்பாற்ற ஹரியானாவில் தந்தை-மகள் இணைந்து ஸ்மார்ட்போனில் எடுத்த செல்ஃபி உலக இயக்கமாக மாறியது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் செய்யும் பணி. இந்திய இளைஞர்களின் பேச்சு இப்போது ஆக்கப்பூர்வமாக மாறியுள்ளது.

ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் இதில் எந்த ஆபரேட் சிஸ்டத்தை தேர்ந்தெடுக்கலாம் என எங்கள் நாட்டு இளைஞர்கள் விவாதித்து வருகிறார்கள். அரசு சிறப்பாக இயங்குகிறதா என்பதை இணையத்தை வைத்தே சோதித்து பார்த்துக்கொள்ள முடிகிறது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் ஏழ்மையை டெக்னாலஜியை கொண்டும், செல்போன்களை கொண்டும் விரட்டியடிக்கிறோம்.

சமூக வலைத்தளங்கள், சமூக தடைகளை உடைத்தெறிந்துள்ளது. அடையாளங்களை அவை பார்ப்பதில்லை. தகுதியை மட்டுமே சமூக வலைத்தளங்கள் பார்க்கின்றன. இந்தியாவில், 80 கோடி மக்கள் 35 வயதுக்கு கீழுள்ளவர்கள். அவர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை இரண்டு டிஜிட்டலில் வளர்ச்சி அடைகிறது.

காகிதம் இல்லாத அரசாட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். இணைய போர்ட்டல் உருவாக்கி, தொழில்தொடங்க வருவோருக்கு வசதி செய்துதருகிறோம். எனவே, தொழிலதிபர்கள் தங்கள் குறிக்கோளில் கவனம் வைக்கலாமே தவிர, அரசின் செயல்பாடு குறித்து யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

டிஜிட்டல் அறிவின்மையையும், கல்வியில்லாமை போன்றே கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளோம். இரண்டையும் அகற்ற இந்திய அரசு முயல்கிறது. 22 அதிகாரப்பூர்வ மொழி கொண்டது இந்தியா. அங்கு மாநில மொழிகளில் பயன்படுத்தும் வகையில், இணையம் வர வேண்டும். அப்போதுதான், அது வெற்றி பெறும். பிராந்திய மொழிகளில் இணையத்தை கொண்டுவருவதாக சுந்தர் பிச்சை வாக்குறுதியளித்துள்ளார். அவருக்கு நன்றி.

இந்தியா-அமெரிக்கா இடையே நட்புறவு சீராக உள்ளது. இரு நாடுகளும் இணைந்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், பணியாற்ற வேண்டும். சிலிக்கான் வேலியிலுள்ள ஒவ்வொருவரும் டிஜிட்டல் இந்தியாவில் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply