பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
இன்று காலை பி.எஸ்.எல்.வி. சி-30 என்ற ராக்கெட் வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் எக்ஸ்ரே கதிர்கள், புறஊதா கதிர்களை ஆய்வு செய்ய ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-30 அனுப்பப்படுகிறது.
விண்வெளியில் உள்ள எக்ஸ்ரே கதிர்கள், புறஊதா கதிர்களை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைகோள்களை அனுப்ப திட்டமிட்டு, அதற்காக ‘அஸ்ட்ரோசாட்’ என்ற நவீன தொலை தொடர்பு வசதிகளுடன் கூடிய செயற்கைகோள் ஒன்றை கடந்த சில மாதங்களாக வடிவமைத்து வந்தது. பின்னர் அந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான ‘கவுண்ட்டவுன்’, கடந்த 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோள், TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH, INDIAN INSTITUTE OF ASTRO PHYSICS உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய கருவிகளை ஏற்றிக்கொண்டு பி.எஸ்.எல்.வி. விண்ணுக்கு சென்றுள்ளது. இதேபோன்ற செயற்கைக்கோள்களை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளன. ஆனால், நாம் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோள் தனித்துவம் வாய்ந்தது. இந்தச் செயற்கைக்கோளோடு 4 அமெரிக்க செயற்கைக்கோள்கள், 1 இந்தோனேஷிய மற்றும் கனடா செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.