போலீஸாரிடம் அட்டாக் பாண்டி கொடுத்த வாக்குமூலம் என்ன? பரபரப்பு தகவல்
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு நெருக்கமானவராக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த சில மாதங்களாக தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி கடந்த வாரம் மும்பையில் கைது செய்யப்பட்டார். அட்டாக் பாண்டியை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து கொண்டிருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் அணிக்கு அட்டாக் பாண்டி மாறியது குறித்தும் பிரபல வார பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தது குறித்தும் இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸார் நீதிபதியிடம் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அட்டாக் பாண்டி வாக்குமூலமாக கூறியது என போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுவது இதுதான்: “தனது முன்னேற்றத்தை பொட்டு சுரேஷ் தடுத்தார். தன் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்ய வைத்தார். மு.க.அழகிரியிடம் நெருங்கவிடாமல் செய்தார். இதனால் தனக்கு அரசியல் எதிர் காலம் இல்லாமல் போய்விடும் என்பதற்காக கூட்டு சதி செய்து, தனது கூட்டாளிகள் மூலம் பொட்டு சுரேஷை கொலை செய்தேன். கொலைக்குப் பின்னர் கடந்த 33 மாதங்களாக பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்தேன் இவ்வாறு அட்டாக் பாண்டி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை நேற்றுடன் முடிந்ததால், நேற்று மாலை 5.30 மணிக்கு நீதிபதி பாரதிராஜா வீட்டில் அட்டாக் பாண்டியை போலீஸார் ஆஜர்படுத்தினர். போலீஸார் தன்னை துன்புறுத்தவில்லை என அட்டாக் பாண்டி தெரிவித்தார். ஏற்கெனவே அட்டாக் பாண்டிக்கு அக்டோபர் 6ஆம் தேதிவரை நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டதால், அவரை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
அப்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியிலில் மு.க.அழகிரி பக்கத்தில் இருந்து, மு.க.ஸ்டாலினுடைய பக்கம் செல்ல மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி, சென்னை மா.சுப்பிரமணியன் ஆகியோரை அட்டாக் பாண்டி தொடர்புகொண்டு சில கோரிக்கைகளை வைத்துள்ளார், அவர் ஸ்டாலின் முகாமுக்கு மாறியது, ஒரு வார பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளது, மேலும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளது குறித்து அட்டாக் பாண்டியிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக மேலும் 4 நாட் கள் போலீஸ் காவலுக்கு அனு மதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தனர்.
இதற்கு அட்டாக் பாண்டி தரப்பில் ஆஜரான வழக் கறிஞர்கள் மணிகண்டன், தாமோ தரன் ஆகியோர் நீதிபதியிடம் அளித்த மனுவில், அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், மதுரை சிறைக்கு மாற்றக் கோரியும், என்கவுன்ட்டர் செய்யவுள்ளதாக தொடர்ந்து தகவல் வருவதாகவும் தெரிவித்தனர்.
காவலுக்கு அனுப்புவது குறித்து இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அவர் மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.