அதிமுக அரசின் அடுத்த திட்டம் ‘அம்மா செல்போன்’. சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக அரசின் அடுத்த திட்டம் ‘அம்மா செல்போன்’. சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
jayalalitha
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்ற பல திட்டங்கள் வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில்,  மகளிர் சுய உதவிக் குழு பயிற்சியாளர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் அம்மா செல்போன்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்று வாசித்த முதல்வர் கூறியதாவது: “மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.

மேலும், ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005 ஆம் ஆண்டு அதிமுக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புது வாழ்வுத் திட்டத்தையும் துவக்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். சுய உதவிக் குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிந்து வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்து கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.

விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள் வழங்கப்படும் ‘அம்மா கைபேசி திட்டம்’ என்ற புதிய திட்டம் துவக்கப்படும்.

முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா கைபேசிகளை  அரசு வழங்கும்”

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

Leave a Reply