பிரபல கால்பந்து வீரரின் ரூ.310 கோடி சொத்துக்கள் முடக்கம்
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான நெய்மர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் அவருக்கு சொந்தமான ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரேசில் அணியின் முன்கள வீரர்களில் ஒருவரான நெய்மர், தற்போது பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் தாய்நாட்டை சேர்ந்த சான்டோஸ் அணிக்காக விளையாடிய நெய்மரை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பார்சிலோனா அணி சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் வரை வரி ஏய்ப்பில் நெய்மர் ஈடுபட்டிருப்பதாக சா பாலோ நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது 33.1 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சொத்து மதிப்பை, வெறும் 3.2 மில்லியன் பவுண்டுகள் என்று குறைத்து காட்டி, 10.5 மில்லியன் பவுண்டுகள் வரை அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பிரேசில் நிதித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நெய்மருக்கு சொந்தமான ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனது பெற்றோருடன் இணைந்து நெய்மர் நடத்தி வரும் 3 நிறுவனங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.310 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டாலும் தனது வங்கி கணக்கை அவர் பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது.