எதிர்பார்த்த எரிவாயு கிடைக்காததால் ரூ.270 கோடி நஷ்டம் அடைந்த அமெரிக்க நிறுவனம்
உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனமான, ராயல் டட்ச் ஷெல் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா என்ற பகுதியில் எரிவாயு கிணறைத் தோண்டுவதற்கு சுமார் பத்து ஆண்டு காலம் போராடி உரிமம் பெற்றது. ஆனால், அந்த இடத்தில் அந்த நிறுவனம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் எரிவாயு தோண்டு பணியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்த எரிவாயு விலை திடீரென அதிகரித்துள்ளது.
அலாஸ்காவின், சூக்ச்சி கடலில் உள்ள பர்கர் ஜே கிணற்றில் எரிபொருளுக்காக கடல் பகுதிக்கும் கீழே தோண்ட கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியை பெற்ற ராயல் டட்ச் ஷெல் நிறுவனம், அந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் எரிவாயு கிடைக்கும் என நம்பியது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போட்டியாளர்களை சமாளித்து சுமார் 460 கோடி ரூபாய் செலவு செய்தது. எனினும், இதுவரை 6,800 அடி வரை தோண்டியும் இந்த நிறுவனம் எதிர்பார்த்த அளவு எரிபொருள் கிடைக்காததால், அதிருப்தி அடைந்து இனிமேல் எரிபொருளுக்காக தோண்டப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளது.
இதன்மூலம், சுமார் 270 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் எரிபொருள் கிணற்றை தோண்டுவதற்கு பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது