மத்திய அரசு நாடு முழுக்க 100 ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத்தப் படும் என்று அறிவித்தாலும் அறிவித்தது, கடந்த சில மாதங்களாக ‘ஸ்மார்ட் சிட்டி’ என்பது மெத்தப் படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை ‘டாக் ஆஃப் த சிட்டி’யாக மாறியிருக்கிறது.
ஆனால் எத்தனை பேர் அந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது சந்தேகமே!
சான் பிரான்சிஸ்கோ க்ரானிக்கிள் எனும் பத்திரிகையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ‘எ கன்டினியுஸ் லவ் லெட்டர் டு சான் பிரான்சிஸ்கோ’ என்ற பத்தியை எழுதிவந்த ஹெர்ப் கயேன் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “நகரம் என்பது நீள அகலங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக, அதனுடைய பரந்த தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் உயர்ந்த கனவுகள் ஆகியவற்றைக் கொண்டே அது கட்டமைக்கப்படுகிறது”.
அவரின் வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், ‘ஸ்மார்ட் சிட்டி’ என்பது நவீனமயமான நகரம் என்பதல்ல, அடிமட்டத்தில் இருக்கும் சகமனிதனையும் அரவணைத்துச் செல்வதுதான் என்பது புரியவரும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று நம்மில் பலர் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்பதை நல்ல குடியிருப்புகள், போக்குவரத்து வசதி, வணிகம் செய்வதற்கு ஏற்ற சூழல், நல்ல முறையில் இயங்கும் கழிவு மேலாண்மை, தானியங்கிச் செயல்பாடுகள் கொண்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த முறையில் பயன்படுத்தப்படும் மின்சாரம் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினை அது முதலீட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது” என்கிறார் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்புத் துறைத் தலைவர் ராகுல் மெஹ்ரோத்ரா.
மேலும் அவர் கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி என்பது ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்குமான இணைப்பைச் சுலபப்படுத்துவது என்று நினைக்கிறோம். எனில், நான் பஸ் ஸ்டாப்பில் நின்றால், வழக்கமாகப் பேருந்து வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகிறதென்றால், ஸ்மார்ட் சிட்டி வந்த பிறகு 10 நிமிடத்துக்குள் பேருந்து வந்துவிடும். ஆக, நான் 10 நிமிடங்களைச் சேமிக்கிறேன். ஆனால், அந்த ஸ்மார்ட் சிட்டி, எனக்கான நகரமாக, மனிதாபிமானம் கொண்ட நகரமாக இல்லாமல் போனால், அந்த 10 நிமிடங்களைச் சேமிப்பதில் எனக்கு ஆர்வம் இருக்காது” என்கிறார்.
பல நேரம் ‘ஸ்மார்ட் சிட்டி’யை உருவாக்கும்போது, உள்கட்டமைப்புகளுக்குத்தான் நாம் அதிக முக்கியத்துவம் தருகிறோம். ஆனால் நாம் எங்கிருந்து வந்தோம், நமது கலாச்சாரம் என்ன உள்ளிட்ட பலவற்றை நாம் மறந்துவிடுகிறோம்.
இவற்றை நாம் இழந்துவிடாமல் இருக்க வேண்டுமெனில், ஸ்மார்ட் நகரங்களில் ‘கேடட் கம்யூனிட்டி’ முறை அமைக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல பூங்காக்கள், மைதானங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற வசதிகள் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
ஸ்மார்ட் நகரங்கள் மெட்ரோ ரயில்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, அந்த நகரத்தின் மக்கள், பொது வசதிகளைத் தொழில்நுட்பத்தின் உதவியோடு பயன்படுத்த சுலபமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
சில கட்டிடக் கலைஞர்கள், நகர வடிவமைப்பார்கள், ‘ஸ்மார்ட் சிட்டி’ என்பதற்குப் பதிலாக ‘குட் சிட்டி’ (நல்ல நகரம்) வேண்டும் என்று கருதுகிறார்கள். ‘குட் சிட்டி’ என்பவை வளங்குன்றா வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பவை. ஆனால் தற்போது நம்மிடையே இருக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இவை காணப்படவில்லை.
மேலும், சுகாதாரம் 19-வது இடத்திலும், வளங்குன்றா வளர்ச்சி 15-வது இடத்திலும் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆக இவற்றின் மூலம் நமக்குத் தெரியவருவது, வெறுமனே தொழில்நுட்பம் மட்டும் ஒரு இடத்தை மனிதர்கள் வாழ்வதற்கான நகரமாக மாற்றிவிடாது. ரோமானிய நகரமான போம்பே, விவிலிய நகரங்களான சோடோம், கொமோரா போன்றவை தங்களிடம் இருந்த தொழில்நுட்பத்தாலேயே அவை அழிவதற்கும் காரணமாக இருந்துள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்மிடம் அதிகாரம், அறிவு மற்றும் வளங்கள் ஆகியவை இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நாம் எப்படி மாறப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது ‘ஸ்மார்ட் சிட்டி’யின் உண்மையான வெற்றி.