‘‘கர்ப்பப்பையில் வருகிற ஒருவித தசைக் கட்டியே ஃபைப்ராய்டு. இதில் 3 வகைகள் உள்ளன. Submucosal fibroids என்பது கர்ப்பப்பையின் உள்புற குழிவுப் பகுதியில் ஏற்படுவது. Subserosal fibroids என்பது கர்ப்பப்பையின் வெளியில் வளர்வது. Intramural fibroids என்பது கர்ப்பப்பையின் தசைச் சுவர் இடுக்கில் வளர்வது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாவதே இதற்கு முக்கிய காரணம். பருமனுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உடலின் அதிகப்படியான கொழுப்பிலிருந்தும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும்.
அதன் விளைவாக ஃபைப்ராய்டு வரலாம். அசைவ உணவுகளை அதிகம் உண்கிற பெண்களுக்கும் வரலாம். பால் முதல் அசைவ உணவுகள் வரை அனைத்தையும் கொடுக்கும் விலங்குகளுக்கு இன்று ஹார்மோன் ஊசிகள் போடுவது சகஜமாகி விட்டது. அவற்றை உண்ணுவோருக்கும் அந்த ஹார்மோன்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும். பரம்பரையாகவும் இது தாக்கலாம். பாட்டி, அம்மா, சித்தி வழியில் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு வரலாம்.
மாதவிலக்கு நாட்களில் அளவுக்கு அதிக ரத்தப் போக்கு. நிறைய நாட்கள் நீடிப்பது. மாதவிலக்கே வராமல் இருப்பது. மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு அழுது துடிக்கிற அளவுக்கு வலி. 5 மாதக் கர்ப்பம் மாதிரி வயிறு பெருத்துக் காணப்படுவது. மலச்சிக்கல் மற்றும் முதுகு, கால்களில் கடுமையான வலி. ஃபைப்ராய்டு கட்டிகள், குழந்தையின்மைக்குக் காரணமாகலாம். Submucosal fibroids வகையிலான ஃபைப்ராய்டு, கருவானது பதிந்து, வளர்வதைத் தடுக்கக்கூடியது.
எனவே இந்த வகைக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருத்தரிப்பதற்கு முன்பே இவற்றை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மிக அரிதாக இந்தக் கட்டிகள், சினைக் குழாய்களையும் பாதிக்கலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவு கண்டு பிடிக்கப்படும். மாதவிலக்கின் போது கடுமையான வலியோ, அதீத ரத்தப் போக்கோ இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவரைப் பார்த்து ஃபைப்ராய்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் ஆரம்பத்திலேயே வராமல், வயிறு பெருத்து, தொப்பை விழுந்த மாதிரித் தோற்றம் வந்த பிறகு, அதற்கான காரணம் அறிய வேண்டி தான் மருத்துவரை சந்திக்கிறார்கள். மற்ற அறிகுறிகளைக் கேட்டு, சோதனை செய்கிற போது, அவர்களது ஃபைப்ராய்டு கட்டி பெரிதாக வளர்ந்திருக்கும். 4 அல்லது 5 செ.மீ. அளவுள்ள கட்டிகள் என்றால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமே சரி செய்து விடலாம். அதன் மூலம் கர்ப்பப்பையையும் பாதுகாக்கலாம்.
அதுவே கட்டி வளர்ந்து பெரிதாகி விட்டால் (சில பெண்களுக்கு 15 செ.மீ. அளவுக்குக் கூட வளர்வதைப் பார்க்கலாம்) சிகிச்சையளிப்பது சிரமம். கர்ப்பப்பையும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்சனையை குணப்படுத்த மருந்துகள் கிடையாது. GnRH analogues என்கிற ஒரு ஊசி போடப்படும். அதை மாதம் ஒரு முறை என 3 மாதங்களுக்குப் போட வேண்டும். அதுவும் கட்டியைக் கரைக்காது. தற்காலிகமாகச் சுருக்கும். மறுபடி கட்டி வளரும். அதனால், அறிகுறிகளை உணர்ந்து சீக்கிரமே சோதித்து, எளிய சிகிச்சையில் சரி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்…