இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பதவியை ராஜினாமா செய்ய முடிவா?
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆன நிலையில், அவரது பதவிக்காலம் வரும் 2020ஆம் ஆண்டுவரை உள்ளது. மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுத்துள்ள பிரதமர் கேமரூன், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பதவி விலகிவிட முடிவு செய்திருப்பதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது கேமரூன் வரும் 2019ஆம் ஆண்டே பதவி விலகிவிடுவார் என்றும் அவருக்கு பின்னர் உள்துறை மந்திரி தெரசா மே, லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், நிதி மந்திரி ஜார்ஜ் ஆஸ்பர்ன் ஆகியோர்களில் ஒருவர் பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளனர். இது குறித்து பிரதமர் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தபோது, “பிரதமர் தெளிவாக உள்ளார். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்திற்கும் பதவியில் தொடருவார்” என கூறினார். இதனால் பிரதமர் பதவி விலகுவது குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.