ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் ஒரு காமெடி டைம். மு.க.அழகிரி
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘நமக்கு நாமே’ என்ற சுற்றுப்பயணத்தை கன்னியாகுமரியில் ஆரம்பித்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, மாவட்டங்களில் உள்ள பொதுமக்களை சந்தித்து கடைசியாக திருச்சியில் தனது பயணத்தை முடித்தார். இரண்டாம் கட்ட ‘நமக்கு நாமே’ பயணத்தை அவர் மீண்டும் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கிண்டல் செய்துள்ளார்.
குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்த மு.க.அழகிரி நேற்று சென்னை திரும்பினார். அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, ‘நமக்கு நாமே’ பயணம் என்பது ஒரு காமெடி டைம் என்றும் இதனால் கட்சிக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது என்றும் கூறினார்.
மேலும் வைகோவின் மதிமுகவில் இருந்து பலர் விலகி திமுகவில் சேர்வது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘நான் இப்போது திமுகவில் இல்லை என்றும் அதனால் அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது’ என்றும் கூறினார்.
மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தை திமுக தலைவர் உள்பட பலர் பாராட்டி வரும் நிலையில் மு.க.அழகிரி இந்த பயணத்தை கிண்டல் செய்தது அனைவரையும் திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.