காஞ்சிபுரம் சேதமடைந்த உற்சவர் சிலையை மாற்ற கூடாது!

bannar11

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2.10.15-ல் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேதமடைந்துள்ள உற்சவர் சிலையை மாற்றக் கூடாது; பழைய சிலையைத்தான் பயன்படுத்த வேண்டும் என, உபயதாரர்கள் கருத்து தெரிவித்தனர்.

1,000 ஆண்டுகள் பழமை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது அந்த சிலையின் கால் பகுதி சேதமடைந்துள்ளது.இதையடுத்து சேதமடைந்த உற்சவர் சிலையை மாற்றி, வேறு சிலையை அமைக்க, ஆணையருக்கு கோவில் ஸ்தானிகர்கள் சிலர் கடிதம் எழுதினர். அறநிலையத்துறை ஆணையர் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, கடந்த செப்., 2ம் தேதி, கோவிலை பார்வையிட்டு கூறுகையில், சேதமடைந்துள்ள சிலை அபூர்வமானது. அதைபோல வேறு ஒரு சிலையை செய்ய முடியாது. சேதமடைந்த பகுதியை சரி செய்து பயன்படுத்தலாம், என்றார்.
இதுகுறித்து உபயதாரர்களிடம் கருத்து கேட்கும் ஆலோசனை கூட்டம் கோவிலில் 2.10.15-ல் நடந்தது.

2.5 கிலோ தங்கம்: அதில், சேதமடைந்துள்ள உற்சவர் சிலையை மாற்றக் கூடாது; பழைய சிலையைத்தான் பயன்படுத்த வேண்டும் என, உபயதாரர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர். அந்த சிலையை சரி செய்ய, 2.5 கிலோ தங்கம் தேவைப்படும். அதற்கு, 80 ஆயிரம் ரூபாய் கூலி கொடுக்க வேண்டி வரும் என, ஸ்தபதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள தங்கத்தை வைத்து சிலையை சரி செய்யுங்கள்; நாங்கள் கூலியை தந்து விடுகிறோம் என, உபயதாரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கூறுகையில், ஆணையருக்கு கடிதம் அனுப்புகிறோம். அவரிடமிருந்து உத்தரவு வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Leave a Reply