பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் யார்? தமிழிசை-எச்.ராஜா இடையே கடும் போட்டி?
பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பாஜகவின் மாநிலத்தலைவர் பதவிக்கு இம்முறை கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாஜக மாநிலத்தலைவராக இருக்கும் தமிழிசை செளந்திரராஜன் உள்பட மேலும் பலர் களத்தில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாநில கட்சி தலைவரை போட்டியின்றி தேர்வு செய்ய கட்சி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.
பாஜக கட்சியின் விதிகளின்படி கிளை கமிட்டி முதல் அகில இந்தியத் தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2009, 2012ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சர் ஆனதால், மாநிலத் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் 2014 ஆகஸ்ட் 16ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது பாஜகவின் மாநிலத்தலைவர் பதவியின் காலம் முடிவடைந்து தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தலைவர் பதவிக்கு தமிழிசை, எச்.ராஜா, எஸ்.மோகன்ராஜுலு ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்.ராஜா தனது பலத்தை காட்ட சமீபத்தில் சென்னை, காரைக்குடியில் தன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார். தமிழிசையும் தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் மாநிலத்தலைவர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி தேர்தல் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.