கோமாதாவை வதைப்பவர்களை கொலை செய்வோம். பாஜக எம்பி பகிரங்க எச்சரிக்கை
மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அல்கத் கான் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் மக்களிடம் இருந்து நீங்காத நிலையில், பசுவதை செய்பவர்களை கொலை செய்வேன் என பகிரங்கமாக பா.ஜ.க. எம்.பி. சாக்க்ஷி மகாராஜ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பசுவதை செய்வது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”எங்கள் கோமாதாவை யாராவது வதைக்க முயன்றால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். கோமாதாவை வதைப்பவர்களை கொலை செய்வோம் அல்லது எங்கள் உயிரை கொடுத்தாவது கோமாதாவை காப்பாற்றுவோம்.
அடித்துக் கொலை செய்யப்பட்ட அக்லத் கான் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் வழங்கிய உத்தரபிரதேச முதலமைச்சர் எனது தொகுதியில் பலாத்காரம் செய்யப்பட்ட 2 பெண்களுக்கு வழங்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சாக்ஷி மகாராஜ். இவருடைய, இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் அசம்கான் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாட்டிறைச்சி மூலம் பா.ஜ.க. பிரச்னைகளை திசை திருப்ப பார்ப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பிரதமரின் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி பசுவதை செய்பவர்களை கொலை செய்வோம் என பகிரங்கமாக அறிவித்திருந்தும் பிரதமர் மோடி இன்னும் மெளனம் காப்பது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.