ரூ.8 கோடி ஊழல் வழக்கு. ஐ.நா. சபை முன்னாள் தலைவர் அதிரடி கைது.

ரூ.8 கோடி ஊழல் வழக்கு. ஐ.நா. சபை முன்னாள் தலைவர் அதிரடி கைது.
Un
ஐ.நா. சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே ஊழல் வழக்கு ஒன்றுக்காக நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்களை மட்டுமின்று உலக தலைவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2013-2014ஆம் ஆண்டுகளில் ஐ.நா.சபையின் தலைவர் பதவியிலும், ஆன்டிகுவா-பார்புடா நாட்டுக்கான ஐ.நா. தூதராக இருந்தவருமான 61 வயது ஜான் ஆஷே என்பவர் சீனாவை சேர்ந்த தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர் லேப் செங் ஆகியோர்களிடம் இருந்து லஞ்சமாக சுமார் ரூ.8 கோடியே 45 லட்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்த லஞ்சத்தை அவர்  ஐ.நா.வுக்கான ஆன்டிகுவா-பார்புடா நாட்டின் தூதராக பணியாற்றிய காலகட்டத்தில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில்  ஜான் ஆஷே நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் உள்பட உலகத்தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பான் கீ மூன் அவர்களின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஆஷே மீது எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுதொடர்பாக நடத்தி வந்த விசாரணை குறித்து அமெரிக்க அரசு வக்கீல் அலுவலகத்தில் இருந்து, ஐ.நா. சபைக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கு பற்றி எங்கள் சட்ட விவகாரங்கள் துறை அலுவலகத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் செய்தி வந்த பின்னர்தான் இது குறித்து தெரிய வந்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டால், தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம்” என்று கூறினார்.

இந்த ஊழல் வழக்கில் ஜான் ஆஷேயுடன் ஐ.நா.வுக்கான டொமினிக்கன் குடியரசின் துணைத்தூதர் பிரான்சிஸ் லாரன்ஸோ, லேப் செங், ஜெப் யின், ஷிவெய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply