பழநி திருஆவினன்குடி கோயிலில் ரூ.7 லட்சம் மதிப்பிலான சோலார் (சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்க) மின் உற்பத்திக்காக 40 பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடிகோயில் சோலார் மின் உற்பத்திக்காக ரூ.7லட்சம் செலவில் ராஜகோபுரம் அருகே 40 பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும். அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 யூனிட் வீதம் 1,500 யூனிட் வரை வெயிலின் தாக்கத்திற்கு ஏற்றவாறு மின்சாரம் உற்பத்தியாகும். இது நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பழநிஉப கோயில்களில் முதன்முதலாக திருஆவினன்குடி கோயிலில் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. இது கோயில் கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால், சோலார் பேனல் செயல்பாடுகள், அன்றைய மின்உற்பத்தி நிலவரம் உள்ளிட்டவற்றை பொறியாளர்கள், அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும். சோலார் மின்சாரம் கோயிலில் உள்ள ஏ.சி., பேன் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மின்கட்டணம் ஓரளவிற்கு மிச்சமாகும். இதன் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக அனைத்து கோயில்களிலும் சோலார் பயன்படுத்தப்படும்,” என்றார்.