இணைய உலகின் முன்னணி தேடு பொறியான கூகுள் உதயமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிதாகப் பிறந்துள்ளது. கூகுள் புதிய தாய் நிறுவனத்தின் கீழ் வந்திருக்கிறது. அதற்கு புதிய சகோதர, சகோதரி நிறுவனங்களும் உருவாகியிருக்கின்றன.
இது எதிர்பார்த்த மாற்றம்தான். ஆனால் இப்போது (அக்டோபர் 2) அதிகாரப்பூர்வமாக நிகழ்ந்திருக்கிறது.
தேடியந்திரமாக அறிமுகமாகி மாபெரும் தேடல் சாம்ராஜ்யமாக உருவெடுத்த கூகுள், யூடியூப், ஆண்ட்ராய்டு, ஜி-மெயில், குரோம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இவை தவிர துணை நிறுவனங்கள் மற்றும் ஆய்வுத் திட்டங்களும் அதன் கீழ் இயங்கி வந்தன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுள் இணை நிறுவரான லாரி பேஜ், கூகுளின் வரத்தக சீரமைப்பு திட்டத்தை அறிவித்து வியப்பை ஏற்படுத்தினார். ‘ஆல்பபெட்’ எனும் பெயரில் புதிய தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டு கூகுள் மற்றும் தேடல் சார்ந்த சேவைகள் அதன் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சீரமைப்பின் முக்கிய அம்சமாக கூகுளில் உயர் பதவியில் இருந்த நம்மவரான சுந்தர் பிச்சை நிறுவன சி.இ.ஓ. ஆக மகுடம் சூட்டப்பட்டார்.
இந்தச் சீரமைப்புக்கான நோக்கம் மற்றும் பின்னணிக் காரணங்கள் பற்றி எல்லாம் தொழில்நுட்ப உலகில் அலசி ஆராயப்பட்ட நிலையில், இப்போது இந்த மாற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் இது தொடர்பான விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு கூகுளின் பங்குகள் ஆல்பபெட் பங்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இனி கூகுள் ஆல்பபெட்டின் கீழ் துணை நிறுவனமாக செயல்படும். கூகுள் துணை நிறுவனமாக மாறுவதற்கு முன் தற்காலிகமாக ஆல்பபெட் அதன் துணை நிறுவனமாக இருந்து அதன் பிறகு தாய் நிறுவனம் அதை தத்தெடுத்துக்கொண்டது.
புதிய தாய் நிறுவனம் மற்றும் சகோதர துணை நிறுவனங்கள் தவிர கூகுள் சேவையிலோ அதன் செயல்பாட்டிலோ எந்த மாற்றமும் இல்லை.அதன் ‘தீமை செய்ய வேண்டாம்’ (டோண்ட் பீ ஈவில்) என்ற கொள்கையும் மாறாமல் இருக்கிறது. இந்த தார்மிக நெறிமுறை தான் கூகுளை இயக்கிவருகிறது. ஆனால் ஆல்பபெட்டிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சரியானவற்றைச் செய்வது என்பதே அதன் வழிகாட்டிக் கொள்கையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியானவற்றைச் செய்வது எனும் கொள்கை தாய் நிறுவனமாக ஆல்பபெட்டிற்குக் கூடுதல் சுதந்திரத்தை அளிக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.
எல்லாம் சரி, ஆல்பபெட் பெயரைத் தேர்வு செய்ய என்ன காரணம்? “ஆல்பபெட் என்பது, மனிதகுலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான மொழியைக் குறிக்கும் எழுத்துகளின் தொகுப்பை உணர்த்துகிறது. கூகுள் தேடலில் பொருத்தமான முடிவுகளை எப்படிப் பட்டியலிடுகிறோம் என்பதற்கும் அடிப்படையாக விளங்குகிறது. அதனால்தான் இந்த பெயர் பிடித்துப்போனது” என்று லாரி பேஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆல்பபெட்டிற்கு தனி இணையதளம் இருந்தாலும் அதன் முகவரி ஆல்பபெட்.காம் இல்லை. இந்த பெயரில் பி.எம்.டபிள்யூவின் பிரிவு சார்பில் ஏற்கெனவே இணையதளம் பதிவு செய்யப்பட்டுவிட்டதால் abc.xyz எனும் முகவரியில் ஆல்பபெட் இணையதளம் இயங்குகிறது.
இனி கூகுளின் சகோதர நிறுவனங்களின் பட்டியலைப் பார்க்கலாமா? கூகுள் எக்ஸ் (தானியங்கி கார்கள், ட்ரோன் சேவை, வை-பை), கூகுள் வென்சர், கூகுள் கேபிடல், கூகுள் பைபர் (அதிவேக இணைய இணைப்பு), நெஸ்ட் (இல்லங்களுக்கான தானியங்கி சாதனம்), சைட்வாக்ஸ் லேப், காலிகோ மற்றும் கூகுள் லைப் சயின்சஸ்.
ரோபோ ஆய்வில் ஆர்வம் கொண்டவர்கள் கூகுள் கையகப்படுத்திக்கொண்ட போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் என்ன ஆனது எனும் கேள்வி இருக்கலாம். நாலு கால் பாய்ச்சலில் ஓடும் ரோபோ நாய் மற்றும் அட்லஸ் இயந்திர மனிதனை உருவாக்கிய அந்த நிறுவனம் கூகுள் எக்ஸ் கீழ் வந்துள்ளது. தொடர்ந்து ரோபோ ஆய்வில் ஈடுபட உள்ளது.