ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திடீர் திருப்பம்
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கின் விசாரணை வரும் 12ஆம் தேதி வரவுள்ள நிலையில் திடீரென இந்த வழக்கை 6 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடைபெறவுள்ளது.. இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி நால்வரின் சார்பிலும் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீது 3 வாரத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 3 வார கால கெடு முடிந்து வரும் 12 ஆம் தேதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு தொடங்க இருக்கும் நிலையில், கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 6 வார கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.