ஆஸ்திரேலியாவில் வாழ விருப்பம் இல்லாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள். பிரதமர் ஆவேசம்
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 58 வயது காவல்துறை அதிகாரியான கர்டிஸ் செங் என்பவரை அவரது அலுவலகத்தின் வாசலிலேயே 15 வயது பர்ஹாத் ஜபார் என்ற தீவிரவாதி சுட்டதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போலீஸரின் துப்பாக்கிச் சூட்டில் பர்ஹாத் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வாழ விருப்பம் இல்லாதவர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இங்கு தீவிரவாதத்திற்கு இடமில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள உள்ளார்ந்த மதிப்புகள் பிடிக்காதவர்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறிவிடலாம். இங்குதான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆஸ்திரேலியாவின் நெறி முறைகளை விரும்பாவிட்டால், வெளியில் நிறைய இடம் இருக்கிறது. சென்றுவிடுங்கள் என்று ஆஸ்திரேலிய மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
15 வயது சிறுவனை தீவிரவாத பாதைக்கு தூண்டியுள்ள தீவிரவாதிகள் அரசியல், மத ரீதியாகவும் செயல்படுகின்றனர். அந்த தீவிரவாதத்தை ஒடுக்க ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அதேபோல் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் கலாச்சாரத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.