ரூ.900 கோடி முறைகேடாக கடன். கிங் பிஷர் அதிபர் விஜய் மல்லையா வீட்டில் சிபிஐ சோதனை
பிரபல தொழிலதிபரும் கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையா, ஐடிபிஐ வங்கியிடம் ரூ.900 கோடி முறைகேடாக கடன் பெற்றது குறித்தும், கடனை திருப்பிச் செலுத்தாதது குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘”மும்பை, கோவா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மல்லையாவுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனையின் விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
“கிங்பிஷர்’ மதுபான ஆலை, “கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் விஜய் மல்லையா தலைமையிலான யுனைடெட் புருவெரீஸ் (யுபி) குழுமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இதில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, ஐடிபிஐ வங்கியில் விதிமுறைகளை மீறி கடன் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடன் பெறுவதற்கான அளவுகோல் (கிரெடிட் லிமிட்) பலமுறை அதிகரிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் தத்தளித்த கிங்பிஷர் நிறுவனம் தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கிங் பிஷர் நிறுவனம் உள்ளது. இந்நிலையில், மோசடியாகக் கடன் வழங்கப்பட்டது, கடனை திருப்பிச் செலுத்தாதது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் விஜய் மல்லையா, அந்நிறுவனத்தின் முதன்மை நிதி ஆலோசகர் ரகுநாதன் உள்ளிட்டோர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, யு.பி. குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியபோது தேவையான ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும், இனியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் யு.பி. குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் சுமந்தோ பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.