பீகாரில் வாக்குப்பதிவு தொடங்கியது. 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
பீகார் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இன்று 49 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் (சரத்யாதவ்), ராஷ்டீரிய ஜனதாதளம்(லாலுபிரசாத் யாதவ்), காங்கிரஸ் ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜ.க., லோக் ஜன சக்தி (ராம்விலாஸ் பஸ்வான்), ராஷ்டீரிய லோக் சமதா, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. மேலும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி., ஆகியவை 3வது அணியாக தேர்தல் களத்தில் உள்ளன.
இன்றாஇய முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் மொத்தம் 13,212 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் பணியில் 90 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், தேர்தல் பாதுகாப்புக்காக 725 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவத்தினரும் மற்றும் பிற மாநில போலீசாரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுகிறதா என்பதை கண்டறிய பீகார் வரலாற்றில் முதல் முறையாக ஆள் இல்லாத குட்டி விமானங்களை தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.