புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.முன்னோர் நினைவாக மகாளய அமாவாசையில் பூஜை செய்து நீராடினால், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.நேற்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கரையில் முன்னோர்களுக்கு பூஜை செய்து, கடலில் நீராடினர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். இதனையடுத்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தர்ப்பணம் செய்ய நல்ல நாள்: ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஒரு பிள்ளையை வளர்க்க பெற்றோர் செய்த தியாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர். நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின் திதியன்று சிரத்தையுடன் (மறக்காமல் கவனமுடன் ) செய்தல் அவசியம் என்பதால் இதனை “சிரார்த்தம் என்றும் சொல்வார்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவர், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று திருக்குறளில் குறிப்பிடுகிறார். இதில் சொல்லப்படும் “தென்புலத்தார் என்பது மறைந்த முன்னோரையே குறிக்கும். முன்னோர்களின் உலகம் தெற்கு திசையில் இருப்பதால், அவர்கள் வாழும் உலகத்தை “தென்புலம் என்று குறிப்பிடுவர். தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம்.