நவராத்திரி ஆரம்பம்

images

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது. இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள்.

விரதமுறை: நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாகக் கருதி வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்ததால் இவளை, சாமுண்டா என்றும் அழைப்பர். இவள் நீதியை காக்க கோபமாக இருக்கிறாள். இவளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும்.  இரண்டாம் நாள் அம்பிகையை வாராஹியாக வழிபடவேண்டும். இவளுக்கு தயிர்ச்சாதம் படைத்து வணங்க வேண்டும்.  மூன்றாம் நாள் அம்பிகையை இந்திராணியாக வணங்க வேண்டும். அரச பதவிகள், அரசு பதவிகள் அனைத்தும் இவள் அருளாலேயே கிடைக்கும். இவளுக்கு எலுமிச்சை சாதம் படைக்க வேண்டும். நான்காம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக கருதி வழிபட வேண்டும். இவளை விஷ்ணு சக்தி என்பர். இவளுக்கு கல்கண்டு சாதம் படைக்க வேண்டும்.

ஐந்தாம் நாள் அம்பாளை திரிசூலம், பிறைசந்திரன், பாம்பு ஆகியவை தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். இவளை மஹதீ என்றும் அழைப்பர். சர்வமங்களம் தரும் இவள் தர்மத்தின் திருவுருவமானவள். உழவர்கள், உடலுழைப்பு கொண்டவர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும் வரத்தைத் தருபவள். இவளுக்கு பால் பாயசம் படைக்க வேண்டும். ஆறாம் நாள் நாள் அம்பாளை மயில் வாகனத்துடன், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்பர். இவள் தைரியத்தை அருளுபவள். பாவங்களைப் போக்குபவள். குமார கண நாதம்பா என்றும் இவளை அழைப்பர். இவளுக்கு சித்ரான்னம் படைக்க வேண்டும். ஏழாம் நாளில் இருந்து அம்பிகையை கல்வி தெய்வமாக கருதி வழிபட வேண்டும். இதன் முதல் கட்டமாக அவளை வித்யாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரையை ஆசனமாகக் கொண்டு, தாமரை மலரேந்தி, யானைகளை இருபுறமும் நிறுத்த வேண்டும். இவளது கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுதகலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும்.

இவளுக்கு பால் அன்னம் நிவேதனம் வைக்க வேண்டும். எட்டாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். இவள் சரஸ்வதி வடிவம் தாங்கியவள். அன்ன வாகனம் அமைத்து, அதில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, வெள்ளைத் தாமரை மேடை அமைத்து, அதில் சரஸ்வதியாக அம்பிகையை அலங்கரித்து அமர்த்த வேண்டும். வீணை இருக்கக்கூடாது. கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். விரல்களை சூசிஹஸ்தம் என்னும் நிலையில் வைக்க வேண்டும். அதாவது ஆள்காட்டி விரல் மட்டும் விரிந்திருக்க மற்ற விரல்கள் மடங்கியிருக்க வேண்டும். இவ்வுலகம் பொய்யானது, அவ்வுலகம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தரமானது என்ற ஞானத்தை இந்த முத்திரை பக்தர்களுக்கு உணர்த்தும். இவளுக்கு புளியோதரை நிவேதனம் செய்ய வேண்டும்.  அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமர வைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். இந்நாளில் அம்பிகையை நரசிம்ஹியாகவும் அலங்கரிப்பதுண்டு. இவளுக்கு வெண்பொங்கல் படைக்க வேண்டும்.

நவ என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் இரு விதமான பொருள்கள் உண்டு.  உத்தராயண காலத்தின் (தை ஆனி) நடுவில் வருவது வசந்த ருது (சித்திரை). தட்சிணாயண காலத்தின் (ஆடி மார்கழி) நடுவில் வருவது சரத் ருது (புரட்டாசி). இவ்விரு பருவகாலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக் குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது. இக்காலங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க வசந்த நவராத்திரியை, ராமநவமியை ஒட்டி ஒன்பது நாட்களும், சாரதா நவராத்திரி எனப்படும் சரஸ்வதி பூஜையை ஒன்பது நாட்களும் கொண்டாடுகிறோம். இக்காலத்தில் நம்மை எமனிடம் இருந்து தாயுள்ளத்தோடு காப்பாற்றுபவள் அம்பிகை என்பதால், அவளை வழிபாடு செய்யும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார் கள். மேற்கு வங்காளத்தில் இந்த பூஜையை காளிபூஜை, துர்க்கா பூஜை என்கின்றனர். மைசூருவில் தசரா என்றபெயரில் இவ்விழா சிறப்பாக நடக் கிறது. முப்பெரும் சக்திகளான மலைமகள், அலைமகள், கலைமகள் என்ற முப்பெருந்தேவியருக்கும் மூன்று தினங்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூஜை செய்யப்படுகிறது.

நவராத்திரி பிரார்த்தனை: நவராத்திரி நாட்களில் மாலைவேளையில்  பக்தி சிரத்தையோடு, அம்பாள் முன்னிலையில்  இதனைப் படிப்பவர்கள் அம்பிகை அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும்  பெறுவர்.

* உதய நேரத்தில் கீழ்வானில் தோன்றும்  சூரியனின் சிவந்த ஒளி போன்ற நெற்றித்திலகத்தைச் சூடியிருப்பவளே! நல்லுணர்வு உடைய அன்பர்கள் போற்றுகின்ற மாணிக்கமே! மாதுளம்பூ போன்று செக்கச் சிவந்தவளே!  மலரிலே வீற்றிருக்கும் திருமகள் துதிக்கின்ற மின்னல் போன்றவளே! குங்குமம் போன்ற சிவந்த மேனிவண்ணம் கொண்டவளே!  அபிராமி அன்னையே! நீயே எனக்கு உற்றதுணை!

* படைத்தல், காத்தல், அழித்தல் முதலான மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவளே! கொடி போன்ற இடையினைக் கொண்டவளே! அடியார்களுக்கு ஞானம் அருளும் மனோன்
மணியே! ஜடாமுடியை உடைய சிவபெருமான் பருகிய விஷத்தினை அமுதமாக்கிய பராசக்தித் தாயே! தாமரை மலரை விட, மென்மையான உன் திருப்பாதங்களை அடியேனின் தலைமீது வைத்து அருள் செய்வாயாக.

* தயிரைக் கடையும் மத்து எவ்வாறு சுழலுமோ, அதுபோல என் உயிரானது ஜனன, மரண சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வருகிறது.  இதிலிருந்து என்னைக் காப்பாற்றி உயிருக்கு அடைக்கலம் தா. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவரும், நிலவைச் சூடிநிற்கும் ஈசனும், மகாவிஷ்ணுவுமே கூட, சதா சர்வகாலமும் உன்னுடைய சிவந்த திருப்பாதங்களை  ஆராதனை செய்து போற்றும் போது, சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம்? உன் பாதங்களில் சரணடைகிறேன்.

* எனது அறிவில் ஆனந்தமாக நிறைந்திருப்பவளே! என்றும் நிலையான முக்தி இன்பத்தை உயிர்களுக்கு அருள்பவளே! நான்கு வேதங்களும் விளக்கும் ஆதியந்தப் பொருளே! உன் திருவடித்தாமரைகளை நான் பூஜித்து மகிழ்கிறேன்.

* பதினான்கு உலகங்களையும் உருவாக்கி, அவற்றையெல்லாம் காத்து, பின் உனக்குள் ளேயே இவ்வுலகங்களை ஒடுக்கிக்கொள்பவளே! நஞ்சை உண்ட நீலகண்டனுக்கும் மூத்தவளே! இளமை பொருந்திய மகாவிஷ்ணுவின் தங்கையே! உன்னைத் தவிர, எனக்கு இவ்வுலகில் வேறு அடைக்கலம் யாருமில்லை.

* பச்சை வண்ணமுடைய அமுதம் போன்றவளே! உன்னைப் போற்றுபவர்கள் உள்ளத்தில் பிரகாசிக்கும் ஞானச்சுடரே! வான் முதலாகிய உலகின் பஞ்சபூதங்களாகவும் பரவி விரிந்திருப்பவளே! உன்னிடம் அன்பு கொண்ட இந்த எளியவனின் அறிவிற்கு எட்டும் வகையில் நீ அருள் செய்தது அதிசயம் அன்றோ!

* எனது வாழ்நாள் முழுவதும், உன்னை விட்டு அகலாத இறைவனும், நீயும் கொண்ட திருமணக்கோலத்தில் காட்சி தந்து அருள் செய்ய வேண்டும். என் துன்பம் தீர உன்னுடைய திருப்பாதங்களை எனக்குத் தந்து உதவ வேண்டும்.

* மங்களத்தின் இருப்பிடமே! மலையில் வாழும் மலைமகளே! மணமும், வண்ணமும் மிக்க ஒளிபொருந்திய சிவந்த திருக்கரங்களைக் கொண்டவளே! கலைஞானத்தின் திரளாகத்திகழும் அழகு மயிலே! பொங்கும் கங்கை நதியைத் தலையில் சூடியிருக்கும் இறைவனை விட்டு நீங்காது இருப்பவளே! குளிர்ச்சி பொருந்திய மெல்லிய கொடி போன்றவளே! அபிராமி அன்னையே! எனக்கு அருள் செய்வாயாக.

நவராத்திரி  கொண்டாட்டத்தின் நோக்கம்: ஒரு மனிதனுக்கு உடல்வலிமை, பராக்கிரமம், தீர்க்காயுள், புத்திபலம், ஞானம், மனோசக்தி என்று எல்லாவித அம்சங்களும் இருந்தால் தான் வெற்றியாளராகத் திகழமுடியும். இவற்றைப் பெறவே தேவியைப் பலவிதமான வடிவங்களில் நவராத்திரி காலங்களில் பூஜிக்கிறோம். முதல் மூன்று தினங்கள் பிரதமை முதல் திரிதியை வரையில் மகேஸ்வரனிடமிருந்து தோன்றிய மகேஸ்வரி, குமரப்பெருமானிடமிருந்து தோன்றிய கவுமாரி, வராகமூர்த்தியிடமிருந்து அவதரித்த வராஹி ஆகியோரை பூஜித்து மேற்கண்ட பலன்கள் அனைத்தையும் பெறுகிறோம். வாழ்வுக்கு பொருள் அவசியம் தேவை. எனவே, நான்காம் நாளான சதுர்த்தி முதல் மூன்று நாட்கள் வாழ்வில் வளம் தரும் திருமகளை குறித்த வழிபாட்டினைத் துவங்கவேண்டும். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீதேவி, விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வைஷ்ணவிதேவி, இந்திரனிடமிருந்து தோன்றிய இந்திராணி மூவரையும் துதிக்க செல்வவளமும், பொருள்வளமும் பெற்று மகிழலாம். கடைசி மூன்று நாட்களான சப்தமி திதி முதல் நவமி திதி வரை மகா சரஸ்வதியைக் குறித்த வழிபாட்டினை செய்ய வேண்டும். நரசிம்மரின் சொரூபமாகிய நரசிம்ஹி, சண்ட முண்டர்களை வதம் செய்த சாமுண்டி, தயாளசிந்தை, ஞானம், வித்தை, கலைகளை அருளும் சரஸ்வதி தேவி ஆகியோரை வழிபாடு செய்ய ஞானம் உண்டாகும். எட்டாவது நாளே துர்க்காஷ்டமியாக மகிஷனை சம்ஹாரம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நவதேவியர் வழிபாட்டினை ஒன்பது நாட்களும் செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று தினங்களாவது  வழிபாடு செய்தல் அவசியம்.

Leave a Reply