ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் மீதான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு திடீர் மாற்றம்.
கோவில் பூசாரி ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் மீது பதிவான வழக்கு தேனி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த வழக்கு தற்போது திடீரென திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி என்ற பகுதியில் கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்த நாகமுத்து என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் சிலர் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் ஓ.ராஜா உள்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை தேனி நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஆர்.மாலா, இந்த வழக்கை திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு மாற்றியும், இந்த வழக்கை திண்டுக்கல் நீதிமன்றம் 4 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டார்.