திருமலையில் கட்டப்படஉள்ள, 1,000 கால் மண்டபத்தின் வரைபடத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. திருமலை, ஏழுமலையான் கோவில் எதிரில், மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 கால் மண்டபம் இருந்தது. அங்கு, தேவஸ்தான புகைப்பட அருங்காட்சியகம் இயங்கி வந்தது. ஆனால், 2003ல், திருமலை வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் அந்த மண்டபத்தை, தேவஸ்தானம் அகற்றியது.
இதை எதிர்த்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், திருமலையில் அகற்றப்பட்ட, 1,000கால் மண்டபத்தை உடனே கட்ட வேண்டும் என, உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியாகி பல நாட்களாகியும், மண்டபம் அமைக்கும் பணி தள்ளி போடப்பட்டு வந்தது.இந்நிலையில்,திருமலையில் உள்ள நாராயணகிரி வனப் பகுதியில், 1,000 கால் மண்டபத்தை அமைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது; இதன் வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது.
அதன் மாதிரி வடிவம், நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பிரம்மோற்சவம் முடிந்த பின், கட்டுமான பணிகள் துவங்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.