இசைஞானி இளையராஜா, ‘குபேரலிங்கம்’, ‘சிரிக்கும் புத்தா’ பற்றிய புரிதல்கள் மீது தன் அனுபவ வெளிச்சம் பாய்ச்சுகிறார்!

இசைஞானி இளையராஜா, ‘குபேரலிங்கம்’, ‘சிரிக்கும் புத்தா’ பற்றிய புரிதல்கள் மீது தன் அனுபவ வெளிச்சம் பாய்ச்சுகிறார்!

”நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பல இடங்களில் ‘குபேரன் கோயில்’ என எழுதிவைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ‘குபேரனுக்கும் கோயில் கட்டியிருக்கிறார்களே!’ என ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் கோயில்களே மக்கள் மத்தியில் குபேரனை வணங்கி வரலாம் என உள்ளே செல்லவும் வணங்கவும் பூஜை செய்யவும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டன.

நமது முன்னோர்கள் எது எதற்கு கோயில் கட்டியிருக்கிறார்கள் என நமக்குத் தெரியும்.  அதை மட்டுமே நாம் செய்தால் போதாதா? ஜனத்தொகை கூடுகிறது. வீடுகள், சிற்றூர் ஆகின்றன. ஊர், பேரூர் ஆகிறது. பேரூர், நகரம் ஆகிறது. நகரங்கள் பெருகப்பெருக ஆங்காங்கே வீடுகள் கட்டப்படுவதைப்போலவே, கே.எஃப்.சி., மெக்டொனால்ட்ஸ் போன்றவையும் சூப்பர் மார்க்கெட்களும் வந்துவிடுகின்றன.

அதுபோல, கோயில்களும் வர வேண்டாமா? அதுவும் பெரும் அளவில் கட்டப்படுகின்றன. அதில் வியாபார நோக்கத்தோடு கோயில் கட்டும் நபர்கள் இதுபோல ‘குபேரன் கோயில்’ எனக் கட்டிவிடுகிறார்கள். திருவண்ணாமலையில்கூட குபேரலிங்கம் அடையாளம் இல்லாமல் இருந்தது. அது இன்று மற்ற லிங்கங்களுக்கு உள்ள கோயில்களைவிட மிகவும் பெரியதாக, விசேஷமாகக் கட்டப்பட்டுள்ளது. இன்று அது ஏதோ, ‘குபேரன் லிங்கமாக இருக்கிறான்’ என்ற நம்பிக்கையில் மக்கள் பூஜிக்க திரள்திரளாகக் கூடுகிற அளவுக்குப் போய்விட்டது.

அது அப்படி அல்ல… திருவண்ணாமலையைச் சுற்றி அமைந்த அஷ்டலிங்கங்கள் இந்திரலிங்கம்,  அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், சூர்யலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள். இவற்றில் இந்திரன், திருவருணை ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டும் பூஜித்ததும் இந்திரலிங்கம். இதைப்போலவே அஷ்டதிக்குபாலர்களும்

வழிபட்ட அஷ்டலிங்கத்துள் குபேரன், லிங்கம் வைத்து ஈசனை வழிபட்டதுதான் குபேர லிங்கமே ஒழிய, குபேரனுக்கே லிங்கம் வைத்து யாரும் வழிபடவில்லை. குபேரலிங்கத்தை வழிபடும் யாரும் குபேரன் பூஜைசெய்த லிங்கத்தை வழிபடவில்லை. அவர்களது மனதில் குபேரனையே கும்பிடுவதாகத்தான் அவர்களது எண்ணம்.

நெடுஞ்சாலைகளில் உள்ள குபேரன் கோயில்களில் உள்ள குபேரனுக்கு வைத்த உருவ அமைப்பைக் கண்டேன். அது குபேரனுடைய உருவம் அல்ல. அது ஜப்பானில் செல்வச் செழிப்புக்காக, புத்தருக்கு ‘சிரிக்கும் புத்தர்’ (Laughing Buddha) என நன்றாக உடல் பெருத்து, கொழுகொழுவென செல்வச்செழிப்போடு இருக்கும் ஓர் உருவம் கொடுத்து அதை வீடுகளில் வெறுமனே வைத்திருப்பது வழக்கம். அது விடுதிகளில் வரவேற்பறையில் இருக்கும்.

இது மெதுவாக இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழ் மக்களிடையே வேகமாகப் பரவி வேரூன்றிவிட்டது. வெறுமனே அது வீட்டில் இருந்தால் போதும் என எல்லா வீடுகளிலும் அதை வாங்கி வைப்பது என்பது கட்டாயமாகிவிட்டது. அதுதான் (சிரிக்கும் புத்தர்) குபேரன் என்ற பெயரோடு இங்கே பல இடங்களில் கோயில் கட்டிவைத்து மக்கள் மனதை மயக்கி மரத்துப்போகவைத்திருக்கிறார்கள்.

இதில் ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும். புராணங்களில் குபேரனுக்கு ஐந்து கால்கள் உள்ளன என்றும், அவனுக்கு ஒற்றைக் கண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவன் தேவர்களின் செல்வங்களுக்கு மட்டுமே அதிபதி; மானிடர்களின் செல்வங்களுக்கு அல்ல.

இந்த மாதிரியான கோயில்களுக்குச் செல்வதோ குபேரன் மனைவி சகிதம் அச்சடிக்கப்பட்ட படங்களை வாங்கி வீடுகளில் வைத்து பூஜை செய்வதோ பலன் தருமா என நீங்கள் யோசிக்க வேண்டாமா?!

Leave a Reply