சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் கொடுத்த மனுவில் கூறியிருப்பது என்ன? முழு தகவல்

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் கொடுத்த மனுவில் கூறியிருப்பது என்ன? முழு தகவல்
vishal
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாண்டவர் அணியினர் என்று கூறப்படும் விஷால் அணியினர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவில் தேர்தல் அன்று விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும், வாக்களிக்க வரும் முத்த நடிகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளதாக பாண்டவர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவில் பாண்டவர் அணியினர் கூறியிருப்பதாவது: வரும் 18ஆம் தேதி ஞாயிறு நடைபெறவிருக்கும் தென் இந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே ஒரு கடிதம் கொடுத்துள்ளோம். தற்போது உள்ள சூழலில், எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அனைவரும் பயமின்றி வாக்களிக்கவும் உச்சக்கட்ட பாதுகாப்பையும் C.C.T.V Cameraக்கள் நிறுவியும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்தவிதமான வன்முறையும் எங்களின் அணியினால் நடக்காது என்பதையும், நியாயமான ஜனநாயக முறையில் அமைதியான தேர்தல் நடக்கவும் எங்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும் இதன்மூலம் உறுதி செய்கின்றோம்.

மேலும் தபால் ஓட்டுக்கள் வரத் தொடங்கியுள்ளதால் தபால் ஓட்டுக்களை சேகரித்து வைக்கப்படும் பெட்டிக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையினர்களிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக நடிகர் சங்க தலைவர் வேட்பாளர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியபோது, ‘தேர்தலுக்காக ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. எனினும் தேர்தல் நாளில் மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களிக்க வரவிருப்பதால், விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு கேட்கவே இன்று போலீஸ் கமிஷனரை சந்தித்ததாக கூறினார்.

Leave a Reply