கலைஞர் அய்யாவுக்கு பிறகு சூர்யாதான். இயக்குனர் பாண்டியராஜ்
ஐந்து வருடங்களுக்கு முன் கலைஞர் அய்யா முன் ‘வம்சம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இதே மேடையில் நடந்ததாகவும், அதன் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சூர்யாவால் மீண்டும் அதேபோன்ற ஒரு பிரமாண்டமான மேடை தனக்கு இன்று கிடைத்துள்ளதாகவும் ‘பசங்க 2’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாண்டியராஜ் பேசினார்
‘பசங்க’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தேசிய விருது பெற்ற பாண்டியராஜ், அதன் பின்னர் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு ஆகிய படங்களை இயக்கிய பாண்டியராஜ், தற்போது ‘பசங்க 2’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டவர்களை முதலில் வரவேற்று பேசிய பாண்டியராஜ், “கடந்த 2010 ஆம் ஆண்டு இதே மேடையில் கலைஞர் அய்யா தலைமையில் அருள்நிதி நடித்த வம்சம் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. மிகப்பெரியஅளவில் அந்தவிழா நடந்தது.
அப்போதே, இதுமாதிரி இனிமேல் உங்களுக்கும் எனக்கும் ஒரு மேடை அமையாது என்று அருள்நிதி சொன்னார். அவர் சொன்னமாதிரியே ஆகிவிட்டது. அதன்பின்னர் இந்த மேடையேற ஐந்தாண்டுகளாகிவிட்டன. மெரினா படத்தின் பாடல்களை மெரினா கடற்கரையிலேயே வெளியிட்டோம். கேடிபில்லா கில்லாடிரங்கா படத்தின் பாடல்களை இங்கு வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இப்போது சூர்யா சார் மூலம் மீண்டும் இந்த மேடையேறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும்தான் கதாநாயகன், கதாநாயகி. அவர்களுக்குப் பின்னால் நின்று குணச்சித்திர வேடத்தில் சூர்யா சார் நடித்திருக்கிறார். நூறு கோடி வியாபார மதிப்புள்ள எந்த ஹீரோவும் இப்படி நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்ததோடு ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்கவும் முன்வந்தார்.
அதேபோல அமலாபால். சூர்யாவோடு நடிக்கும் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று அவர் பேட்டி கொடுத்திருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கலாம் என்று இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தோம். பிந்துமாதவி, கார்த்திக், முனிஸ்காந்த் ஆகியோர் மட்டுமின்றி நான் கேட்டதற்காக சின்னச்சின்னக் காட்சிகளில் நடித்த சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், இசையமைப்பாளர் சிற்பி உட்பட படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி. நல்ல விசயங்களை நாமே சொல்வதைக் காட்டிலும் சூர்யா சார் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை வைத்துச் சொன்னால் எல்லோருக்கும் போய்ச் சேரும். அது இந்தப்படத்தில் நடக்கும்” இவ்வாறு பாண்டியராஜ் பேசினார்