டிசம்பர் முதல் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனை. நெஸ்லே இந்தியா தகவல்
கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ், மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேகி நூடுல்ஸ் சாப்பிட தகுந்ததே என தெரிய வந்துள்ளதாகவும், இதன் காரணமாக மேகி நூடுல்ஸ் விற்பனையை மீண்டும் நெஸ்லே இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதை அடுத்து, நேற்றைய பங்குவர்த்தகத்தில் நெஸ்லே இந்தியாவின் பங்குகள் 5.86% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் செய்யப்பட்ட சோதனைகளில் மட்டுமின்றி சர்வதேச அளவில் செய்யப்பட்ட சோதனை முடிவுகளும் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு சாதகமாக வந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் பாதுகாப்பானவை என்று கூறியிருப்பதாக நெஸ்லே தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மாகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்ட போது 6.7 கோடி டாலர் அளவுக்கு நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது.நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் மாகி நூடுல்ஸ் மூலமான வருமானம் மட்டுமே 30 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.