தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தல் நடைபெற்று வரும் பள்ளிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியபோது, நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பம், ஒரே ஜாதி, ஒரே இனம். எங்களுக்குள் என்றும் ஒற்றுமை இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்களும், மக்களும் தயவு செய்து நினைக்க வேண்டாம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருபவர்களுக்கு எனது இரண்டு வேண்டுகோள். ஒன்று யார் வெற்றி பெற்றாலும் முதலில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என்று பெயர் மாற்றவேண்டும். அடுத்ததாக உயிரே போனாலும் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் அவ்வாறு நிறைவேற்ற முடியாவிட்டால் நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள். அது உங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.