மத்திய அமைச்சரிடம் இருந்து எம்.பி.ஏ பட்டத்தை வாங்க மறுக்கும் காஷ்மீர் மாணவர். பெரும் பரபரப்பு
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக ஒரு கருத்து பரவி வருகிறது. ஆளும் பாஜகவின் இந்த போக்கை கண்டித்து ஒருசில எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பித்தந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டம் வாங்க காஷ்மீர் இளைஞர் ஒருவர் மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
எழுத்தாளர்கள் கொலை, பாகிஸ்தான் பாடகர் ஒருவரின் நிகழ்ச்சி ரத்து, மற்றும் மத்திய அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு ஆகியவைகளுக்கு காரணமாக உள்ள மத்திய அரசிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டம் வாங்குவதற்கு காஷ்மீர் இளைஞர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து பட்டம் பெறுவதற்கு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்ற சமீர் என்ற இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்துய் தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள சமீர் கோஜ்வாரி, ”நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை கண்டித்து போராடும் 41 எழுத்தாளர்கள் தங்களது விருதினை திருப்பி அனுப்பி உள்ளனர். இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் வெளியாகியுள்ளது. முதுகலை பட்டம், மிகவும் மதிப்புமிக்கது. ஆனாலும், 19ம் தேதி “பட்டமளிப்பு நாள்” நான் பட்டத்தை ஏற்க போவதில்லை” என்று தெரிவித்து உள்ளார்.
இளைஞர் சமீரின் கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது