இந்தி மொழியை கற்றுக்கொடுக்க கோரி போராடும் காலம் விரைவில் வரும். இல.கணேசன்
இந்தி மொழி வேண்டாம் என்று போராட்டம் நடத்திய காலம் போய், இந்தியை கற்றுத்தரக்கோரி போராட்டம் நடத்தும் காலம் விரைவில் வரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் நேற்று ‘மகாமக மகிமை’ என்ற நூலின் 2-ம் பதிப்பு, அதன் இந்தி மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘மகாமக மகிமை டாட் காம்’ என்ற இணையதள தொடக்க விழா ஆகியவை சிறப்பாக நடந்தது. இந்த நூல்களை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்ககேஸ்வர சுவாமிகள் வெளியிட, அதனை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பெற்றுக்கொண்டார்.
நூல்கள் வெளியீட்டிற்கு பின்னர் இல.கணேசன் பேசும் போது, ‘‘பல்வேறு புத்தகங்களை ஆராய்ந்து எளிமையாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாமகம் பற்றிய முக்கியமான புத்தகமாக இது திகழ்கிறது. தென்னிந்தியாவில் இருந்து காசிக்கு செல்வதும், வடஇந்தியாவில் இருந்து ராமேசுவரம் வருவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்தி மொழி பின்தங்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்துப் போராடியவர்கள் தற்போது மாற முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் இந்தி மொழியை இளைஞர்கள் ஆர்வமாக கற்று வருகின்றனர். எனவே, தமிழகத்தில் இந்தியை கற்றுக்கொடுங்கள் என கோரி போராட்டம் நடத்தும் காலம் வரும் என எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறினார்.
இந்த விழாவில் மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் லட்சுமிசேன ஸ்வாமிஜி, ‘அமுதசுரபி’ ஆசிரியர் கிருஷ்ணன், மக்கள் தொலைக்காட்சி சிஇஓ கோமல் அன்பரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நூலாசிரியர் புலவர் வே.மகாதேவன் ஏற்புரை நிகழ்த்தினார்.