ஹேமாமாலினியின் கவர்ச்சிக்கு பீகார் மக்கள் மயங்குவார்களா? லாலு பிரசாத் யாதவ் கருத்து
பீகாரில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்து மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இன்றைய பிரச்சாரத்தில் ‘நடிகை ஹேமமாலினியின் கவர்ச்சியால் வெற்றி பெற்று விடலாம் என பாஜக கனவு கண்டு வருவதாகவும், பா.ஜ.க. தோல்வியை ஹேமாமாலினியால் கூட தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்ட தேர்தலுக்கு பின்னர் தற்போது பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை, பிரபல நடிகை ஹேமாமாலினியை களத்தில் இறக்கியுள்ளது. அவரும் பீகாரின் முக்கிய பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
நேற்று ஒரே நாளில் 3 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசிய ஹேமாமாலினி, ”பிகார் மாநிலம் வளம் பெற வேண்டுமானால் மோடி நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தேர்ந்து எடுங்கள். நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவும் கடந்த காலங்களில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
ஹேமமாலினியின் இந்த பிரசாரம் பற்றி ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”நடிகை ஹேமமாலினியை கொண்டு வந்து பிரசாரம் செய்தால் எல்லாம் மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். ஹேமமாலினி சொல்வதை கேட்டு எல்லாரும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பிகாரில் பா.ஜ.க. படுதோல்வி அடைவதை பார்க்க போகிறீர்கள். பா.ஜ.க. தோற்பதை நடிகை ஹேமமாலினியால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. ஹேமமாலினியை பார்த்ததும் பிகார் மாநில மக்கள் ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள். அப்படி நினைத்தால் அது பா.ஜ.க.வினருக்கு ஏமாற்றமாகவும், தவறாகவும் முடியும்” என்று கூறியுள்ளார்