தத்துவ விசாரம் – துறவு எங்கே?

yogi_2593485f

மோட்சம் என்றால் விடுதல் என்று பொருள். சந்நியாசம் என்றால் துறத்தல். மோட்சம் பெற்ற பின் எதை விட வேண்டும்? அல்லது விடுவதற்கு அங்கே என்ன இருக்கிறது? மோட்சம் பெறுவோம் என்ற எண்ணத்தையே விட வேண்டும்.

ஒரு துறவி இருந்தார். ஒரு நாள் அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓர் வயல் வரப்பிலே படுத்துக்கொண்டிருந்தார். சற்று தொலைவில் ஓர் குளம் இருந்தது. அந்தக் குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சில பெண்கள் குடத்தோடு சென்றுகொண்டிருந்தனர்.

ஒருத்தி சாமியாரைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள்.

“துறவு நிலை என்றால் இதுதான். நமக்குத்தான் தூக்கத்திற்கு ஆயிரம் வசதி தேவைப்படுகிறது. இரவு கொஞ்ச நேரம் ஃபேன் காற்று நின்றுவிட்டாலும் தூக்கம் கெடுகிறது. சாமியாரைப் பார். அரைமுழம் துணி! ஒரு திருவோடு வேறென்ன இருக்கிறது? துறவு என்றால் இதல்லவா துறவு!”.

அடுத்ததாக வந்துகொண்டிருந்த பெண் நறுக்கென்று கேட்டாள்.

“துறவு என்றால் எதுவும் இருக்கக் கூடாது. இங்கு எல்லாம் இருக்கிறதே…”

முதல் பெண் சொன்னாள்:

“ஒரே ஒரு திருவோடுதானே இருக்கிறது…

“ஆமாம். ஆமாம். திருவோட்டில் இருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கும். பிறகு சாமியாரே மாமியார் தேட ஆரம்பித்துவிடுவார்.”

“அப்படியா சொல்கிறாய்….!”

“ஆம். இதற்கு முன் ஒரு சாமியார் நம் ஊரில் இருந்தாரே. அவர் என்ன செய்தார். தன்னுடைய ஒரே துணியான கௌபீன வஸ்திரத்தை அவ்வப்போது எலி கடித்துவிடுகிறது என்பதற்காக ஓர் பூனை வளர்த்தார். இவருக்கே பிச்சை எடுக்க வேண்டும். பூனைக்கும் சேர்த்தல்லவா கேட்க வேண்டும். சரி. தினசரி ஒரு நாள் போலவா வீட்டுக்கு வீடு பூனைக்குப் பால் தர முடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் கோதானம் செய்கிற சாக்கில் ஒரு நோஞ்சான் பசுவைத் தந்தார். அந்த நோஞ்சான் பசுவுக்கு பால் கறக்க புல்லைப் போட வேண்டும். சாணத்தை அள்ள வேண்டும். அதற்காக ஒரு கால் ஏக்கர் நஞ்செய் நிலத்தைத் தானம் செய்தார் இன்னொரு புண்ணியவான். அப்புறம், புல்லறுக்க, மாட்டைக் குளிப்பாட்டி பராமரிக்க, என்று ஓர் பெண்ணை நியமித்துக்கொண்டார். இப்போது சம்சாரியாக இருக்கிறார்” என்றாள் அந்தப் பெண்.

அடுத்த நாள் அதே பெண்கள் தண்ணீர் எடுக்கப் போனார்கள்.

சாமியார் தன்னுடைய திருவோட்டைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு வரப்பு மேலே மண்ணைக் குவித்துப் படுத்திருந்தார்.

ஒரு பெண் ஆச்சரியத்தோடு சொன்னாள்.

“அக்கா, நேற்று ஏதோ சொன்னாயே? திருவோடு சொத்தாக வைத்துக் கொண்டிருப்பவர் எப்படித் துறவியாக முடியும் என்று. இன்றைக்குத் திருவோட்டை தூக்கி எறிந்துவிட்டு என்ன ஏகாந்தமாய் ராஜா மாதிரி படுத்திருக்கிறார் பார்…”

“என்ன பார்ப்பது. அதுதான் ராஜா மாதிரி படுத்திருக்கிறாரே. நமக்குப் பஞ்சுத் தலைகாணி இல்லாவிட்டால் தூக்கம் வருவதில்லை. அவருக்கு வரப்பே தலைகாணியாக இருக்கிறது. தூக்கத்தில்கூடத் துறவிக்கு சுகம் வேண்டியிருக்கிறது என்றால் சாமானிய மக்கள் எம்மாத்திரம்?”

“நீ மோசமான ஆள்” என்றாள் முதல் பெண்.

இது காதில் விழுந்த சாமியார் அடுத்த நாள் மோசமான புல்தரையில் படுத்துக்கொண்டார்.

இதே பெண்கள் மறுநாளும் போனார்கள்.

அதே பெண் கேட்டாள். “பார்த்தாயா, இன்றைக்கு சமதரையில் தலைக்கு கையைக்கூட வைத்துக்கொள்ளாமல் படுத்துக்கொண்டிருக்கிறார். இவரல்லவோ துறவி!”

“என்ன துறவி? எந்தப் பெண்கள் எதைப் பேகிறார்கள் என்று காதைத் தீட்டிக்கொண்டு கிடக்கும் இவரைப் போய் துறவி என்கிறாயே” என்றாள்.

அடுத்த நாள் அந்தத் துறவி அங்கு இல்லை.

Leave a Reply