சிறார்களிடம் உறவு கொண்டால் ஆண்மை நீக்கம். சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து
சிறுவர், சிறுமிகளிடம் உறவு கொள்ளும் காட்டுமிராண்டிகளை, காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் மூலமே கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மையை நீக்க சட்டம் கொண்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஒருவர் சிறார்களிடம் உறவு வைத்திருந்தாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில், பிரிட்டன் பிரஜை மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு: ” குழந்தைகளிடம், சிறார்களிடம் பாலியல் உறவு கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. கற்கால மனிதர்கள் போல நடத்தை கொண்டது. ஆனால் தற்போதுள்ள சட்டத்திட்டங்களால் இது போன்ற குற்றங்களை குறைத்து விட முடியாது. காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்களுக்கு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திட்டங்கள்தான் தேவை. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.
இதனால் சிறார்களை பாலியல்ரீதியிலான துன்புறுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனம் குறைய வாய்ப்புண்டு .
தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 2012ஆம் ஆண்டு 38 ஆயிரத்து 172 பாலியல் குற்றங்கள் சிறார்களுக்கு எதிராக நடந்துள்ளதாகவும் அதுவே 2014ஆம் ஆண்டு அதுவே 89 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவர்களில் வெறும் 2.4 சதவீதம் பேரே தண்டனைக்குள்ளாகின்றனர்.
அமெரிக்கா, போலந்து, தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் சிறார்களிடம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய சட்டங்கள் உள்ளன ” என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த பரிந்துரையை ‘மனித உரிமை மீறல்’ என்ற பெயரில் எதிர்க்கப்போகும் சமூக ஆர்வலர்கள் முதலில்,பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அன்பு பாராட்டுங்கள். ஆறுதல் அளியுங்கள். அதைவிடுத்து உங்கள் கருணையை குற்றவாளியிடம் காட்ட வேண்டாம்.”
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கருத்து வெளியிட்டுள்ளார்.