14 வருடம் கழித்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு மோடி வரவேற்பு

14 வருடம் கழித்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு மோடி வரவேற்பு
geetha
இந்திய எல்லையில் வழிதவறி தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்ற கீதா என்ற பெண் 14 வருடங்களுக்கு பின்னர் நேற்று இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய கீதா நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

கீதாவை வரவேற்ற மோடி, ‘‘மீண்டும் வீடு திரும்பியிருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது உண்மையாகவே அற்புதமான தருணம். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள அனைவரும் உங்கள் மீது அக்கறை செலுத்துவோம்’’ என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தானில் கீதாவை 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த எத்தி பவுண்டேசன் நிறுவனர் பில்குயிஸ் எத்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கீதாவை அன்புடனும், பரிவுடனும் கவனித்துக் கொண்ட எத்தி குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் செய்தது விலை மதிப்பற்றது என்றாலும், உங்கள் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

பில்குயிஸ் எத்தி குஜராத் மாநிலம் ஜுனாகத் பந்த்வா பகுதியை சேர்ந்தவர் என்பதை அறிந்த பிரதமர் மோடி, அவரை குடும்பத்துடன் ஜுனாகத் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் கீதாவை வரவேற்க தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று கீதாவின் சகோதரர் என கூறப்படும் மனோஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாங்கள் கீதாவை சந்தித்து முறைப்படி வரவேற்க விரும்புகிறோம். நம்பிக்கையை இழந்திருந்த எங்களுக்கு இது முக்கியமான நிகழ்வு. வனவாசத்தில் இருந்த ராமர் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அயோத்திக்கு திரும்பியதுபோல், கீதா இந்தியாவுக்கு திரும்பிய இந்த நாள்தான், எங்களுக்கு தீபாவளி என்று மனோஜ் கூறியுள்ளார்.

ஆனால் கீதா தன்னுடைய குடும்பத்தினர்களை அடையாள காட்ட மறுப்பதாகவும், அவருக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்த பின்னர்  சரியான குடும்பத்தினரிடம் கீதா ஒப்படைக்கப்படுவார் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

English Summary: After returning from Pakistan, Geeta meets PM Modi

Leave a Reply