பீகாரில் இன்று 3வது கட்ட தேர்தல். குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டார் லாலு
பீகார் சட்டமன்றத்திற்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் மூன்றாவது கட்ட தேர்தல் 50 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ்குமார், பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, ஆகியோர் தங்களது வாக்குகளை ராஜேந்திரநகர் வாக்குச்சாவடியில் பதிவு செய்தனர்.
முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி, மகள் மிஸா பாரதி, மகன் தேஜ் ஆகியோர்களுடன் பாட்னாவில் வாக்களித்தனர். வாக்களித்தபின் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பீகாரில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதை பார்த்து பிரதமர் மோடி பதட்டம் அடைந்து உள்ளார். அவருக்கு அரசியல் அமைப்பு மீது எல்லாம் ஐடியா கிடையாது. பீகார் மக்களை தவறாக வழி நடத்துகிறார்” என்று கூறினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஒரு அணியாகவும், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மதச்சார்பற்ற கூட்டணி ஒரு அணியாகவும் களம் இறங்கி உள்ளன. இதில், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இன்னும் இரண்டு கட்ட தேர்தலுக்கு பின்னர் பீகார் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவரும்.
- English Summary: Bihar election: Lalu prasad vote with his family