சூப் வகைகளை செய்வதும் சுலபம், பலனும் அபாரம். ஒரு வேளைக்கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும்’. பொதுவாக, சூப் பசியைத் தூண்டக்கூடியது. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம். சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்னை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம். மற்றபடி காய்கறி, கீரை, மூலிகை சூப்களை சாப்பிடலாம்.
மூலப்பிரச்னை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உப்பு, வெண்ணெய் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.
எந்த சூப் தயாரிக்க வேண்டுமோ, அந்த காய்கறி 150 கிராம், கீரை எனில், 100 கிராம். மூலிகை எனில், 50 கிராம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து நறுக்கி, (ஒரு நபருக்கு) 250 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். மூலிகைப் பொடியாக இருக்கும்பட்சத்தில் 10 கிராம் முதல் 20 கிராம் வரை பயன்படுத்தலாம்.
இதில் சிறிது தக்காளி, வெங்காயம், பீன்ஸ், காரட், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள் எல்லாமும் 50 கிராம் வருமாறு சேர்த்து பசுமை மாறாமல் சூடுபண்ணி, மசித்து வடிகட்டி அருந்தலாம். தேவைப்பட்டால், இந்துப்பு அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.